வள்ளுவர் கோட்டம் அருகே திருமாவளவனை கண்டித்து தமிழிசை ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      சென்னை

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்றதை கண்டித்து தமிழக பா.ஜனதாவினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மக்களின் வாழ்க்கை

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்றதை கண்டித்து தமிழக பா.ஜனதாவினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- திருமாவளவனின் பேச்சு இந்துக்கள் மனதை புண்படுத்துவது மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய தெய்வ நம்பிக்கைக்கும் எதிரானது. தமிழ் உணர்வு வேறு தெய்வ நம்பிக்கை வேறு அல்ல. தான் அவ்வாறு பேசவில்லை என்கிறார்.

அவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு தலைவர்களும், நாம் தமிழர் கட்சியும் குரல் கொடுக்கிறது. அவர் கோவிலை இடிக்க வேண்டும் என்று பேசியதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. ஸ்ரீரங்கநாதர், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்களையும், புத்த விகாரங்களையும் இடிக்க வேண்டும் என்று பேசி விட்டு பாபர் மசூதியையும் உதாரணம் காட்டுகிறார். அயோத்தியும் மற்ற கோவில்களும் ஒன்றல்ல. அயோத்தி ராமன் பிறந்ததாக கருதப்படும் புனிதபூமி. அதற்காகத்தான் அயோத்தி மீது தீவிர கவனம் கொண்டுள்ளார்கள்.

சென்னையில் கூட பல கோவில்கள் இடிக்கப்பட்டன. அதை எதிர்த்தாலும் போக்குவரத்துக்கு இடையூறு என்றதும் ஏற்றுக் கொண்டார்கள். நியாயமாக நடப்பவர்கள் இந்துக்கள். சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதற்காக இந்துக்கள் மனதை புண்படுத்த வேண்டாம். டிசம்பர் 6-ந்தேதி நீங்கள் இந்துக்களை புண்படுத்தி பேசினீர்கள்.

ஆனால் மோடி அம்பேத்காருக்கு பெருமை சேர்த்து பேசினார். பட்டியல் இனத்தவர்களுக்காக பா.ஜனதா செய்த சாதனைகளை எங்களால் பட்டியலிட முடியும். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடுவதாக கூறும் உங்களால் நான் வலியுறுத்தி இந்த திட்டத்தை வாங்கினேன் என்று ஏதாவது ஒரு திட்டத்தை சொல்ல முடியுமா? ஓட்டுக்காக மட்டும் சாதியையும், மதத்தையும் கையில் எடுத்து வன்முறைக்கு வித்திடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து