முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபையில் அமைதியாக இருந்து கட்டுப்பாட்டை காக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன. 04- வரும் 8-ம் தேதி தமிழக சட்டசபை கூடவுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதியோடு இருந்து கட்டுப்பாடு காக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 104 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில்., சட்டசபையில் தனித்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும். தினகரன் பேசும்போது கூடுமானவரையில் அமைதி காக்க வேண்டும். எதிர்க்கட்சியான தி.மு.க அதை வைத்து குளிர்காய நினைக்கும், தினகரனுக்கு சரியான பதிலடியை தரும் பணியை மூத்த அமைச்சர்கள் மேற்கொள்வார்கள்.

கட்டுப்பட வேண்டும்...

சட்டசபையில், அரசு கொறடாவின் உத்தரவை மீறி எம்.எல்.ஏ.,க்கள் யாரும் செயல்படக்கூடாது. சட்டப்பேரவையில் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த தொய்வும் இல்லாமல் எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். அ.தி.மு.க. கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதியோடு இருந்து கட்டுப்பாடு காக்க வேண்டும். தி.மு.க எழுப்பும் பிரச்சினைகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். தினகரன் எழுப்பும் குற்றச்சாட்டுகளுக்கு முதல்வரும் துணை முதல்வரும், துறை அமைச்சர்களும் பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு...

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், பேசுகையில்., ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவினர் மெத்தனமாக இருந்து விட்டோம். எனவே அங்கு மதுசூதனன் தோல்வியடைந்து விட்டார். இனி வரும் தேர்தலில் அந்த தேக்கநிலை இருக்கக்கூடாது. விரைவில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் நூறு சதவீதம் வெற்றிக்கனி பறிக்க பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க துணைஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி. ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், உள்ளிட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறி்யதாவது.,

உறுப்பினர்களுக்கு...

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வரும் 8ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. சட்டமன்றத்தின் ஜனநாயக மாண்புகள் அதை தாங்கி பிடிக்கும் தூண்களாக இருக்கின்றன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முடிந்த வரை சட்டமன்றத்தின் ஜனநாயக மாண்புகளை மரபுகளை காப்பாற்றினார். அந்த மாண்புகளையும், மரபுகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் காப்பாற்ற வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி சொல்லும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தாக்கமும் ஏற்படுத்தாது

அப்போது அவரிடம் நிருபர்கள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் சட்டசபையில் நுழைகிறாரே அவர் உங்களுக்கு சவாலாக இருப்பாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயகுமார் , சட்டபேரவையில் தினகரனின் வருகை, ஒரு தாக்கமும் ஏற்படுத்தாது. நாம் ஒருவர் நமக்கு ஒருவர் கதை தான் அது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வைரவரிகளை போல அ.தி.மு.க ஆட்சியும் கட்சியும் நூறாண்டு தழைக்கும். ஓங்கும், வளரும். இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஸ்டாலின்- தினகரன் ஆகியோரால் அ.தி.மு.கவினரின் ஆட்சியை கவிழ்க்கவோ, ஊறுவிளைவிக்கவோ முடியாது. அதற்கான முகாந்திரமும் இல்லை.அ.தி.மு.க ஆட்சி மேலும் நான்கு ஆண்டுகள் நீடிக்கும். அதன் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருந்து இந்த ஆட்சியை காப்பாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து