விரைவில் புதிய தொலைக்காட்சி - நாளிதழ்: அ.தி.மு.க.வுக்கு 12 புதிய செய்திதொடர்பாளர்கள் நியமனம் - இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தமிழகம்
edapadi-panneer 2017 8 22

சென்னை : அ.தி.மு.க.வுக்கு விரைவில் தனி டி.வி மற்றும் நாளிதழ் தொடங்கப்படும் என்றும், அ.தி.மு.க.வுக்கு 12 புதிய செய்தி தொடர்பாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

அ.தி.மு.க. கொள்கைகளையும் குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து வகை தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


12 பேர் நியமனம்

சி.பொன்னையன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, டாக்டர் வைகை செல்வன், ஜெசிடி. பிரபாகரன், ம.அழகு ராஜ், கே.சமரசம், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிச்சாமி, ஏ.எஸ். மகேஸ்வரி, ஆர்.எம்.பாபு முருகவேல், தோழமை கட்சி சார்பில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் ஜவகர் அலி, மேற்கண்ட செய்தி தொடர்பாளை தவிர வேறு யாரும் அ.தி.மு.க சார்பில் நாளிதழ் மற்றும் வானொலி, தொலைக்காட்சி உள்பட சமூக தொடர்பான ஊடகங்களில் கலந்து கொண்டு பேசுவதற்கு தலைமை கழகம் அனுமதி இல்லை.

ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் அ.தி.மு.க. தலைமை கழக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொலைக்காட்சி

மேலும், நேற்று நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி., அம்மா ஆட்சியின் சாதனைகளை முழுமையாக வெளியில் தெரிவிக்க புதிதாக தொலைக்காட்சியும், நாளிதழும் தொடங்குவது பற்றி ஆலோசித்த வருகிறோம். கழக ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம். இதுதவிர அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயர் வைக்கப்பட உள்ளதாகவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து