முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் 128 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எஸ்.பி. அருண் சக்தி குமார் தகவல்

வியாழக்கிழமை, 4 ஜனவரி 2018      திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 2017-ஆம் ஆண்டு  128 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில்அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது-

எஸ்.பி.தகவல்

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 69 கொலை வழக்குகளில்  67இல்  எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 ஆதாயக் கொலை வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதுடன்,  திருட்டுப் போன பொருள்கள் மீட்கப்பட்டன. இதேபோல் மூன்று கூட்டுக் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2017-இல் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017-இல் 16 கொலை வழக்குகளில் 38 பேருக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 128 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  65 பேர் கைதாகியுள்ளனர். விபத்தில் 480 பேர் சாவு:  மேலும், கடந்த ஆண்டு 3 லட்சத்து 59 ஆயிரத்து 700 மோட்டார் வாகன வழக்குகளும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 10,806 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலை விபத்தில் கடந்த ஆண்டு 480 பேர் உயிரிழந்துள்ளனர். 2016-இல் 516 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.கடந்த ஆண்டு மட்டும் 1,892 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. சாலை விதிகளை மீறியது தொடர்பாக 17,498 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் 6,849 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ.1.55 கோடி மீட்பு: கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில் 372 குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மூலம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 51 ஆயிரத்து 677 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. நெல்லை  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் “ஹலோ போலீஸ்’ பிரிவுக்கு கடந்த ஆண்டு 3,169 புகார்கள் மற்றும் குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதன்படி 490 முதல் தகவல் அறிக்கையும், 310 சிஎஸ்ஆரும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 117 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதுதவிர 63 ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதன்மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 99 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதவிர 1,636  மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன,இவ்வாறு அந்த  செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து