முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உழைக்கும் மகளிருக்கான 'அம்மா இருசக்கர வாகனம்' - ஜெயலலிதா பிறந்த நாள் முதல் தமிழகத்தில் வழங்கப்படுகிறது

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : உழைக்கும் மகளிருக்கான  'அம்மா இருசக்கர வாகனம்' மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 முதல் வழங்கப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வாகனங்களை பெற தகுதி உள்ள பெண்கள் யார்? அவர்கள் தாக்கல் செய்யவேண்டிய ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்தும் அரசு விளக்கமாக தெரிவித்துள்ளது.

50 சத மானியத்துடன்...

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு:-

தொலைநோக்குப் பார்வை கொண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, இந்திய நாட்டிலேயே முதன்முறையாக ``மகளிர் பணியிடங்களுக்கு எளிதில் செல்லும் வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும்’’ முன்னோடி திட்டத்தினை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வராக 16.02.2017 அன்று பதவியேற்ற எடப்பாடி கே.பழனிசாமி, அம்மாவின் வழியில் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் முனைப்போடு, பதவியேற்றவுடன் ``அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்திற்கான’’ கோப்பில் முதல் கையெழுத்திட்டு, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்திட ஆணையிட்டார்.

அம்மா பிறந்த நாளன்று...

இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திட அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ``அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தினை’’ சிறப்பாக செயல்படுத்திட பல்வேறு ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கினார். அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் பிறந்த நாளான 24.02.2018 அன்று முதல், உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

மாற்றவோ - விற்கவோ கூடாது

பணிபுரியும் மகளிர் மற்றும் திருநங்கையர் தங்கள் பணியிடங்களுக்கு சென்று வரவும் மற்றும் வங்கிகளுக்குச் சென்று வர ஏதுவாக அவர்களுக்கு ஏற்ற வகையில் கியர் இல்லாத, ஆட்டோ கியர்,  125 சிசி கொள்-திறனுக்கு மிகாமல் இருக்கும் இரு சக்கர வாகனத்தினை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளின் உபயோகத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களும் வாங்கலாம். மேலும் தங்களது சொந்த நிதி அல்லது வங்கிகள் மூலமாகக் கடன் பெற்று, இரு சக்கர வாகனம் வாங்கிக் கொள்ளலாம். புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25,000 இவற்றில் எது குறைவோ அத்தொகையை அரசு மானியமாக  வழங்கும். இம்மானியமானது மகளிரின் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்படுவதால், பயனாளிகள் வாகனத்தை மூன்று ஆண்டுகளுக்கு யாருக்கும் மாற்றவோ, விற்கவோ கூடாது. 

தகுதி உள்ளவர்கள் யார் ?

சுய தொழில் புரிபவர், கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், அரசாங்க தொழில் திட்டங்கள், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், மக்கள் கற்றல் மையம்) தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிபவர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள், அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் மானியம் பெற தகுதியுடையவராவர். 

யார், யாருக்கு முன்னுரிமை ?

மேலும் தொலை தூரங்கள் / மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்கள், மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்கள், கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்ற விதவை, 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாதவர், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் திருநங்கையர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவராவார். பயனாளி விண்ணப்பிக்கும் நாளில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்திற்கும்  மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் 22.01.2018 முதல், மாவட்ட ஆட்சியரகம் / மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விலையில்லாமல் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது. விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மேற்கண்ட அலுவலகங்களிலேயே நேரடியாகவோ அல்லது விரைவு / பதிவு அஞ்சல் மூலமாக  05.02.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களில் உள்ள உரிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

வங்கி கணக்கில்...

திட்டப் பயனாளிகளை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள தேர்வுக் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் தனது சொந்த நிதியில் வாகனத்தை வாங்கினால், வாகன பதிவிற்கான சான்றை பயனாளி அளித்த பிறகு பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக விடுவிக்கப்படும். பயனாளி வங்கி மூலமாகக் கடன் பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தினை அவர்கள் விரும்புகிற வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் சமர்பிக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு வகையிலும் பயனாளி முதலில் வாகனத்தை வாங்கி, அதற்கான மானியத்தை கோரும் விண்ணப்பத்தை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் என்ன ?

பயனாளிகள் விண்ணப்பத்துடன் கீழ்கண்ட ஆவணங்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும்

(1) இருப்பிடத்திற்கான ஆவணம், (2) வயது மற்றும் பிறந்த தேதிக்கான ஆவணம் (பிறப்புச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் / பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) (3) வருமானச் சான்றிதழ் (4) ஓட்டுநர் உரிமம் (5) பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (6) அமைப்புச்சாரா நல வாரியத்திலிருந்து பெற்ற அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையிடமிருந்து பெற்ற அடையாள அட்டை (7) பணி புரிவதற்கான சான்றிதழ் (பணியமர்த்தியவரிடமிருந்து பெற்ற சான்றிதழ்) (8) ஆதார் அட்டை (9) சாதிச் சான்றிதழ் (10) வாகனத்திற்கான விலைப்புள்ளி சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திகுறிபில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து