முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகளை தேசிய மனித உரிமை கழக சிறப்பு பதிவாளர் எஸ்.ஜலஜா ஆய்வு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து தேசிய மனித உரிமை கழக சிறப்பு பதிவாளர் ஜலஜா ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கலெக்டர் முனைவர் நடராஜன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வில் சமூகநலத்துறை மற்றும் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகிய துறைகளின் மூலம்  தடுக்கப்பட்ட  குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்  பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகளில் கல்வி கற்கும் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, குழந்தைகளின்  கல்வி தரம் மற்றும் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்குவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து   கேட்டறிந்தார்.
 இதுதவிர பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிகளுக்கு, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்காக காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், வரதட்சணை கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் கிராமப்புறங்களில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலையுறுதித்திட்டத்தின் கீழ்; மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான குடிநீர் வழங்கல், சாலை வசதி, மின் வசதி, திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  மேலும் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், மகப்பேறு இறப்பு தடுப்பது மற்றும் குழந்தை இறப்பு தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மழைநீர் சேகரிப்பு திட்டம், வறட்சி நிவாரணம், வறட்சியைப் போக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
 முன்னதாக தேசிய மனித உரிமை கழக சிறப்பு பதிவாளர் எஸ்.ஜலஜா  தேவிப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையின் தரம் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து,   சிகிச்சைக்காக வந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.  மேலும் தேவிப்பட்டிணம் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாகச் சென்று, அங்கு பயிற்றுவிக்கப்படும் டிஜிட்டல் வழி கல்வியினை ஆய்வு செய்ததோடு, அரசு ஆரம்பபள்ளிக்கு சென்று அங்கு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்றுவிக்கப்படும் கல்வி முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.    இதுதவிர பூவோடை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியினைப் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.சுஜிபிரமிளா, மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து