நெல்லை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      திருநெல்வேலி

திருநெல்வேலி, பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் மாபெரும் நெல்லை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி மற்றும் அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி,  தலைமையில்  நடைபெற்றது.

பின்னர், கலெக்டர்  புத்தகத் திருவிழா தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.பின்னர் கலெக்டர்  பேசியதாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்பு மிகபிரமாண்டமான முறையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் 2018 பிப்ரவரி 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை 9 நாட்கள் நெல்லை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. பிப்ரவரி 4ம் தேதி காலை தொடக்க விழா நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து விழா பேரூரையாற்றவுள்ளார்கள். விழாவில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள்  கலந்து கொள்ளவுள்ளார்கள். புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் மதியம் 2.00 மணி முதல் கிராமிய கலைஞர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், அறிஞர்களின் சொற்பொழிவு போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இரவு வரை நடைபெறவுள்ளது. மேலும், புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள் பார்வையாளர்கள் பார்வைக்காக அமைக்கப்படவுள்ளது. அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கு பெறும் வகையில் சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு, ரூ.10 இலட்சத்திற்கு மேல் பரிசுத் தொகைகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான புத்தகங்களை பெற்று, பயனடைய வேண்டும். இங்கு நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்திட அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென கலெக்டர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, கலெக்டர் சந்தீப் நந்தூரி,  புத்தகத் திருவிழா அழைப்பிதழை வெளியிட்டார்கள்இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) க.இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கண்ணன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ் உள்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து