மத்தியில் நடக்கும் ஆட்சி தனி மனிதன் ஆட்சி: சத்ருகன் சின்ஹா குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      இந்தியா
shatrughan sinha 2018 02 06

நரசிங்பூர், மோடி தலைமையிலான மத்திய அரசு என்பது தனி மனிதர் நடத்தும் ஆட்சி என்றும், பா.ஜ.க என்பது இரு வீரர்கள் கொண்ட ராணுவம் என்று பா.ஜ.க எம்.பி. சத்ருஹன் சின்ஹா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நரசிங்பூர் எனும் இடத்தில் மிகப் பெரிய மின்திட்டத்துக்காக விவசாயிகளின் நிலத்தை அரசு கையப்படுத்தி வருகிறது. அவர்களின் வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.இதை எதிர்த்து பா.ஜ.கவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, உள்ளூர் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகிறார்.

வாஜ்பாய் ஆட்சியின் போது, கட்சியிலும், ஆட்சியிலும் அனைவரிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதுதான் மிகச்சிறந்த அரசாக இருந்தது. அப்போது இருந்த அமைச்சர்கள்தான் அரசின் அடையாளமாக திகழ்ந்தார்கள்.  - சத்ருகன் சின்ஹா

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க பா.ஜ.க எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா நேற்று அங்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,


நான் மட்டும் அல்ல, பா.ஜ.கவில் உள்ள பெரும்பாலான எம்.பி.க்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், மத்தியில் நடக்கும் ஆட்சி என்பது தனி மனிதரின் ஆட்சியாகவும், கட்சியில் இரு ராணுவ வீரர்களின் (மோடி, அமித் ஷா) நிர்வாகமாகவும் இருக்கிறது எனக் கருதுகிறார்கள்.

கட்சியிலும், ஆட்சியிலும் எம்.பி.க்களின், அமைச்சர்களின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு, அமைச்சர்கள் எந்தத் துறையை கையில் வைத்திருக்கிறார்கள், பொறுப்பு வகிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாது. அப்படியே மக்களுக்கு தெரிந்தால் கூட, அந்த அமைச்சர்கள் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என நினைத்து விடுகிறார்கள்.

வாஜ்பாய் ஆட்சியின் போது, கட்சியிலும், ஆட்சியிலும் அனைவரிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்பட்டது. அதுதான் மிகச்சிறந்த அரசாக இருந்தது. அப்போது இருந்த அமைச்சர்கள்தான் அரசின் அடையாளமாக திகழ்ந்தார்கள் என்று சத்ருகன் சின்ஹா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து