4 வது ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்கா வெற்றி - தவாணின் சதம் பலனளிக்கவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2018      விளையாட்டு
SA win 4th ODI 2018 2 11

ஜோகன்ஸ்பர்க் : வாண்டரர்ஸ் ஒருநாள் போட்டியில் தொடரை இழக்கும் அபாயத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியை முதலில் 289 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் திருத்தப்பட்ட இலக்கான 28 ஓவர்களில் 202 ரன்கள் இலக்கை 25.3 ஓவர்களில் விரட்டி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து ஷிகர் தவணின் சதம், கோலியின் 75 ரன்கள், இவர்க்ள் இருவரும் சேர்ந்து கூட்டணி அமைத்த 158 ரன்கள் பிறகு தோனியின் பினிஷிங் மூலம் 289 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் டக்வொர்த் முறையில் ஸ்கோர் திருத்தப்பட 28 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும், ஆனால் 25.3 ஓவர்களில் 207/5 என்று அதிரடியில் வெற்றி பெற்று தொடரில் 3-1 என்று பின் தங்கியுள்ளது.

பிங்க் சீருடையில் 6-வது போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றது. டிவில்லியர்ஸ் அணிக்கு வந்தவுடனேயே அந்த அணியின் உடல் மொழியே வேறு ஒரு தன்னம்பிக்கையை எட்டியதைப் பார்க்க முடிந்தது. அதனால்தான் முதல் 3 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரை நேற்று புரட்டி எடுத்தனர். இவர்கள் இருவரும் 11.3 ஒவர்கள் வீசி 119 ரன்கள் விளாசப்பட்டனர். அதாவது குல்தீப் யாதவ் 6 ஓவர்களில் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், சாஹல் 5.3 ஒவர்கள் 68 ரன்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க அணி ஆடிய ஷாட்கள் சில திகைப்பூட்டும் புதுவகை ஷாட்களாக அமைந்தன. விக்கெட் கீப்பர் கிளாசன் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 43 ரன்களையும், டேவிட் மில்லர் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும் விளாசியதோடு 47 பந்துகளில் 72 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். சாஹல், குல்தீப் யாதவ்வை அடித்து நொறுக்குவது என்ற திட்டத்துடன் களமிறங்கியது போல் தெரிகிறது. பெலுக்வயோ இறங்கி 5 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்தார், வெற்றிக்கான ஷாட்டே சிக்ஸ்தான்.

தென் ஆப்பிரிக்கா தொடக்க வீரர் மார்க்ரம் அருமையாக ஆடி 23 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது இடி-மின்னல் மழைக்கு முன்பாக பும்ராவின் சற்றே ஃபுல் லெந்த் பந்தை ஷார்ட் பிட்ச் பந்தாக தவறாகக் கணித்து லெக் திசையில் அடித்து ஆட நினைக்க பந்து கால்காப்பைத் தாக்கியது, நடுவர் அவுட் கொடுக்க ரிவியூ அதனை உறுதி செய்தது. ஆனால் 7.2 ஒவர்களில் 43 ரன்கள் என்ற நல்ல தொடக்கத்தை பெற்றது தென் ஆப்பிரிக்கா,

பிறகு இடி-மின்னல்-மழை தாக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் நின்று போனது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 28 ஓவர்களில் 202 ரன்கள் என்று திருத்தப்பட்டது.
ஆட்டம் தொடங்கியவுடனேயே 9வது ஓவரில் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார், அந்த ஓவரில் அவர் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். குல்தீப் 2வது ஓவரையும் சிக்கனமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 11 ஓவர்களில் 57/1. வெற்றிக்கு 17 ஓவர்களில் 145 ரன்கள் தேவையாக இருந்தது. அதன் பிறகு பாண்டியா ஓவரில் ஆம்லா பீட்டன் ஆனார், ஒரு இன்சைடு எட்ஜும் எடுத்து அதிர்ஷ்டம் அமைய எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியையும் அடித்தார் ஆம்லா. 16 ஓவர்களில் 137 ரன்கள் தேவை.

டுமினி சர்ச்சைக்குரிய அவுட்:

குல்தீப் யாதவ் தன் 3வது ஓவரை வீச வந்த போது 10 ரன்களில் இருந்த டுமினி நன்றாக மேலேறி வந்து ஆட முற்பட்டார், ஆனால் குல்தீப்பின் பந்து வந்த விதம் அவர் அக்ராஸ் த லைனில் ஆட வைத்தது கால்காப்பில் வாங்கினார் நடுவர் ஜீலே கையை உயர்த்தினார், தென் ஆப்பிரிக்காவிடம் ரிவ்யூ எதுவும் இல்லை. அதிருப்தியுடன் வெளியேறினார் டுமினி, சுமார் 3-4 அடி அவர் மேலேறி வந்து ஆடியிருப்பார். இதையெல்லாம் அவுட் கொடுப்பது அரிதே. டிவில்லியர்ஸ் களமிறங்கி 2 ரன்களை எடுக்க 13 ஓவர்கள் முடிவில் 70/2.

புவனேஷ்வர் குமாரின் அற்புத கேட்ச்:

அடுத்த பாண்டியா ஓவரில் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து வர டிவில்லியர்ஸ் அதனை முறையாக டீப் மிட்விக்கெட் பவுண்ட்ரிக்கு அனுப்பினார். மறுமுனையில் ஹஷிம் ஆம்லா 40 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை ஒரு சிப் ஷாட் ஆடினார், பந்து லாங் ஆஃபில் சிக்ஸ் நோக்கிச் சென்றது, பவுண்டரிக்கு வெகு அருகே புவனேஷ்வர் குமார் உயரே எழும்பி தலைக்கு மேல் கேட்ச் எடுத்தார், ஆனால் சமநிலை குலைந்து எல்லைக் கோட்டை கடந்து விடுவோம் என்று நினைத்த அவர் பந்தை மீண்டும் உள்ளுக்குள் தூக்கிப் போட்டு விட்டு மீண்டும் வந்து பிடித்தார். நெருக்கடியான தருணத்தில் அபாரமான கேட்ச் அது. ஆம்லா வெளியேற மில்லர் அதே ஓவரின் கடைசி பந்தை அசுர ஸ்வீப் ஷாட்டில் பவுண்டை விளாச 15 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 83/3. குல்தீப் யாதவ் இதுவரை அருமையாக வீசி 4 ஒவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தார்.

திருப்பு முனை ஓவர்: சாஹலுக்கு விளாசல்

16வது ஓவரில் யஜுவேந்திர சாஹல் வீச அழைக்கப்பட்டார். 4-வது பந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆன பந்தை டிவில்லியர்ஸ் முழங்காலை சற்றே மண்டியிட்டு மிட்விக்கெட்டில் ஒரே தூக்கு தூக்க சிக்ஸ் ஆனது, அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் ஆக அமைய அதனை மீண்டும் மிட்விக்கெட்டில் பளாரென்று சிக்ஸ் அடித்தார். முதல் ஓவரிலேயே சாஹல் 17 ரன்களை கொடுத்தார்.

அடுத்த ஓவரை பாண்டியா வீச 18 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்த டிவில்லியர்ஸ், பாண்டியாவின் பந்தை மீண்டும் ஒரு சிக்ஸ் அடிக்க நினைத்துத் தூக்க லாங் லெக்கில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதானதல்ல. 11 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று கடினமாகவே தோன்றியது.

ஷ்ரேயஸ் ஐயர் மில்லருக்கு விட்ட கேட்ச்... அல்ல மேட்ச்... அல்ல தொடர்:

பாண்டியா ஒருமுனையில் அபாரமாக வீச டேவிட் மில்லரை ஒரு முறை பீட்டனும் செய்திருந்தார், முதல் ஓவரில் 17 ரன்கள் கொடுத்த சாஹல் அடுத்த ஓவரை வீச வர டேவிட் மில்லர் மிடில் அண்ட் ஆஃபுக்கு வந்த பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் முன் விளிம்பில் பட்டு பந்து உயரே எழும்ப ஷ்ரேயஸ் ஐயர் வலது புறம் ஓடி பிடிக்க முயன்றார் பந்து அவரது மணிக்கட்டில் பட்டு தவறியது. இது மிகப்பெரிய கணமாக அமைந்தது, கேட்சை விட்டதோடு மேட்சையும் விட்டு இந்திய அணி தொடரை முடிக்க வேண்டிய வாய்ப்பையும் தற்காலிகமாக இழக்க நேரிட்டது.

இவர் கேட்ச் விட்டதனால் புத்துயிர் பெற்ற டேவிட் மில்லர் அடுத்த பாண்டியா ஓவரில் மிட் ஆஃப்க்கு மேல், பாயிண்டுக்கு மேல் மிட்விக்கெட்டுக்கு மேல் என்று 3 பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது 19 ஓவர்கள் முடிவில் 121/4. மில்லர் 13 பந்துகளில் 21, கிளாசன் 3 ரன்கள். பிறகு சாஹல் அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கொடுக்க. மறுமுனையில் குல்தீப் யாதவ்வை கிளாசன் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி விளாசி அடுத்து சிங்கிள் எடுத்து மில்லர் கையில் கொடுக்க அவர் குல்தீப் யாதவ்வின் நல்ல பந்தைக் கூட மிட்விக்கெட் மீது அசுர சிக்ஸ் அடித்தார். 42 பந்துகளில் 57 ரன்கள் தேவை என்று தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியின் வெளிச்சம் கிடைத்தது.

பிறகு சாஹலை கிளாசன் ஒரு பவுண்டரி, பிறகு லாங் ஆன் மேல் ஒரு மிகமிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கொடுக்க சாஹல் 4 ஓவர்களில் 45 ரன்கள் என்று விளாசப்பட்டார், ஆனால் மில்லர் கொடுத்த கேட்சை ஐயர் எடுத்திருந்தால் ஒருவேளை தென் ஆப்பிரிக்கா தோற்றிருக்கும் சாஹலும் புகுந்திருப்பார்! கடைசியில் சாஹலின் ஷார்ட் பிட்ச் பந்தை மீண்டும் ஒரு அரக்க சிக்ஸ் அடித்து 28 பந்துகளில் 39 ரன்கள் என்று ஆடி வந்த போது சாஹல் ஒரு பந்தை சற்றே வேகம் குறைவாக வீச பந்து உள்ளே வந்தது, கால்காப்பைத் தாக்க எல்.பி.ஆனார்.

அடுத்த ஓவரை குல்தீப் வீச கிளாசன் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார், பெலுக்வயோ இதே ஓவரில் ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடித்து குல்தீப் யாதவ் ஸ்பெல்லை காலி செய்தார்.

பெலுக்வயோ என்ன மூடில் இறங்கினார் என்று தெரியவில்லை அடுத்த சாஹல் ஓவரை பிரித்தார். சாஹல் 3 போட்டிகளில் வீசியது போல் வேகத்தைக் குறைத்து வீசினார், ஆனால் தடதடவென மேலேறி வந்த பெலுக்வயோ நேராக ஒரு சிக்ஸ் விளாசினார். பிறகு ஒரு ஸ்லாக் ஸ்வீப் மிட்விக்கெட் சிக்ஸ். இத்துடன் ஸ்கோர் 207/5 என்று ஆனது, தென் ஆப்பிரிக்க அணியின் அதிர்ஷ்ட பிங்க் வெற்றி தொடர்ந்தது. பெலுக்வயோ 5 பந்துகளில் 23 ரன்கள் நாட் அவுட், கிளாசன் 23 பந்துகளில் 47 நாட் அவுட்.

ஆட்ட நாயகனாக விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி பேட்டிங்கில் இடி மின்னல் நிறுத்தத்துக்குப் பிறகு தவண், ரஹானே, பாண்டியா ஆகியோரது விக்கெட்டை குறைந்த இடைவெளியில் இழக்க 20-30 ரன்கள் குறைவானது, மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் அருமையாக வீச கடைசி 16 ஓவர்களில் 92 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். 35வது ஒவரில் இந்திய அணி 197/2 என்று நல்ல நிலையில்தான் இருந்தது, அதன் பிறகு பேட்டிங் சரிவு, நல்ல பந்து வீச்சினால் ரன்கள் மட்டுப்பட, பிறகு மழைகாரணமாக டக்வொர்த் முறையில் ரன் இலக்குக் குறைக்கப்பட, சாஹல், குல்தீப் வெளுத்து வாங்கப்பட, டேவிட் மில்லருக்கு ஷ்ரேயஸ் ஐயர் முக்கியமான கேட்சை விட இந்திய அணி தோல்வி கண்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து