முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதல்வர் தலைமையில் 22-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 19 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க வரும் 22-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடவடிக்கைகள்...

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு  வருமாறு:-

காவேரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று பிறப்பித்த தீர்ப்பினை எதிர்த்து, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிவில் வழக்குகள் மீது கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. தமிழ்நாட்டின் உரிமைகளையும், வேளாண் பெருமக்களின் நலன்களையும் கண்ணின் மணிபோல எப்போதும் காக்கும் அரசு, இத்தீர்ப்பு வெளியான அன்றைய தினமே ( 16-ம் தேதி) அதனை முழுமையாக ஆராய்ந்து சாதகமான அம்சங்களை விரைந்து முன்னெடுத்துச் செல்லவும், நமக்குரிய காவேரி நதி நீரினை முழுமையாக பெறவும், சட்ட வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகளை  விரைவாகவும், உறுதியாகவும் எடுக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம் 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு  செய்யப்பட்டு வருகிறது. இப்பிரச்சனையில், தமிழ் நாட்டின் உரிமைகளை  நிலைநாட்டவும், காவேரி நதிநீரைக்கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழ்நாடு  வேளாண் பெருங்குடி மக்களின் நலனை தொடர்ந்து பேணிக்காக்கவும்,   உச்சநீதிமன்றம் கடந்த 16-ம் தேதி பிறப்பித்துள்ள தீர்ப்பின்மீது எடுக்கப்பட  வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன்  கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக வரும் 22-ம் தேதி காலை 10.30  மணியளவில் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது  தளத்தில் முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்  நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின்  கருத்துக்களை பெற்று, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் பேட்டி...

முன்னதாக இது குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன், ஒ.எஸ்.மணியன், தங்கமணி, காமராஜ் ஆகியோர் கூட்டாக  அளித்த பேட்டி வருமாறு:-

இந்த அரசு எப்போதும் வேளாண் பெருமக்களுடைய நலன்களை காக்கின்ற அரசு.  எனவே, காவிரி நதிநீர் பிரசனையைப் பொறுத்தவரை உரிமைகள்   நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்வேறு சட்டப்   போராட்டங்கள் நடத்தியும் 72 மணிநேரம் உண்ணாவிரதம் இருந்தும் காவிரி  உரிமையை நிலைநாட்டுவதற்காக ஜெயலலிதாவும் அதன் வழி வந்த இந்த அரசும்  செயல்பட்டுவருகிறது. காவிரி நதிநீர் சம்மந்தமாக பிப்.16 தேதிய உச்சநீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஆய்வு  செயவதற்காக சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை நடத்தினார். இந்த தீர்ப்பானது  ஒரு உணர்வுரீதியான பிரசனை என்பதால் அதற்கு எவ்வித பாதகமும் ஏற்படாத  வகையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தீர ஆலோசித்து  தீர்ப்பு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும் என்பதற்காக அன்றே அறிக்கை வெளியிட்டார்.

ஆலோசனை நடத்தி...

எனவே நம்முடைய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்  என்ற அடிப்படையில் இன்றைக்கு அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  தலைமைச்செயலாளர், காவிரி நதிநீர் சம்மந்தப்பட்ட சட்ட வல்லுநர்கள்,  அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஆகியோர் காலையில் 10 இருந்து  ஆலோசனை நடத்தி முடிவெடுத்துள்ளோம். அந்த அடிப்படையில்  அனைத்துக்கட்சி கூட்டம் வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி நாமக்கல் கவிஞர்  மாளிகையின் 10-வது தளத்தில் நடைபெற உள்ளது.இந்த அரசு விவசாயிகளின்  நலன் காக்கின்ற அரசாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது 464 பக்கங்கள் கொண்ட  தீர்ப்பு. எனவே, இந்த தீர்ப்பை சட்ட வல்லுநர்கள், அமைச்சர்கள் போன்றோருடன்  ஆராய்ந்து அதன் பிறகு தான் ஒரு முடிவு எடுக்கமுடியும். அதன் இறுதிகட்டமாகத்  தான் இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

கலந்துக்கொள்ள...

முதல்வரின்  வேண்டுகோள் காவிரி பிரச்சனையில் மன வருத்தங்களை மறந்து அனைவரும்  ஒன்றுப்பட்டு நம்முடைய உரிமைகளை பெறுவதற்குண்டான  அனைத்து வழி  வகைகளையும் ஏற்ப்படுத்துகின்ற கூட்டமாக இது இருகின்ற  வகையில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த அரசினுடைய விருப்பம் ஆகும். இதில் அனைத்துக்கட்சியும்  கலந்துக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து