முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ந்த நாடுகளுக்கு இணையான தாய்சேய் நல குறியீடுகளை அடைய தமிழக அரசு நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, அம்மா அரசின் தொலை நோக்கு பார்வை 2023–ன் படி வளர்ந்த நாடுகளுக்கு இணையான தாய்சேய் நல குறியீடுகளை அடைய சீரிய நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தாய்சேய் நலதிட்ட மேம்பாட்டுக்கான மூன்று வருட கூட்டு முயற்சியின் மூன்றாவது ஆண்டில் இரு நாட்டு நிபுணர்களும் தங்களுடைய படிப்பினைகளையும் அனுபவங்களையும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக கருத்தரங்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:–

சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய முயற்சியின் காரணமாக இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதுடன் 2016–ம் வருடத்திற்கான சிசு மரண விகிதம் 17ஆகவும், மகப்பேறு இறப்புவிகிதம் 62 ஆகவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் குழந்தைபேறு ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இத்தகைய தருணத்தில் உலகதரத்திற்கு இணையான சிறந்த கர்ப்ப கால கவனிப்பும், பாதுகாப்பான பிரசவம் நடைபெறுவதை உறுதிசெய்ய  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 24 மணி நேர தொடர் பிரசவ கவனிப்பு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி, சீமாங் சேவை, மலை பிரதேசங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ முன் காத்திருப்பு அறை, கர்ப்பிணிகளில் பிரசவ சிக்கல்களை கண்டறிந்து தொடர் கவனிப்பு மற்றும் சிகிச்சை அளித்தல், 108 அவசரகால ஊர்தி சேவை, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி சேவை, இளம் சிசு நோய் சிகிச்சைபிரிவு, இளம் சிசு உயிர் நிலைநிறுத்தும் சிகிச்சை, இளம் சிசுபராமரிப்பு சிறு மையம், 11 வகை நோய்களுக்கான தடுப்பூசி வழங்குதல் போன்ற சேவைகள் தமிழக அரசால் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது.

தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த அம்மாவினுடைய வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையும், சிங்கப்பூர் பன்னாட்டு நிறுவனம் மற்றும் சிங்கப்பூர் நலப்பணிகள் இவற்றிற்கிடையே புரிந்துணர்வும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெமாசேக் பவுண்டேஷன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் கே.கே. தாய்சேய் நலமருத்துவமனை சிங்கப்பூர் ஆகியவை மற்ற இணை நிறுவனங்கள்ஆகும்.

தலைமை பயிற்றுனர்களுக்கு பயிற்சி

2015–ம் ஆண்டு முதல் திருச்சி, காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை நலமருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள் தடுக்கப்படக் கூடிய நோய்களால் ஏற்படும் சிசு மற்றும் மகப்பேறு மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்கு தாய்சேய் நல சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள கே.கே. தாய்சேய் நல மருத்துவமனையிலிருந்து பல்நோக்கு மருத்துவகுழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ நிபுணர்களுக்கு தலைமை பயிற்றுனர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.சர்வதேச அளவில் தாய்சேய் நல சேவைகள் கற்றல் மற்றும் பரிமாற்றம் செய்யப்படுவதால், தமிழக அரசால் கர்ப்பகால கவனிப்பில் மென்மேலும் சிறப்பான பேறுகால கவனிப்பு செய்வதுடன், சர்வதேச தரத்திற்கு இணையான மருத்துவசேவைகள் தமிழக மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், சிங்கப்பூர் கவுன்சில் ஜெனரல் ராய் கோ, சிங்ஹெல்த் இயக்குனர் விஜயா ராவ், சிங்கப்பூர் கே.கே. தாய்சேய் நலமருத்துவமனை தலைவர் ஷெப்பிலி தாகூர் அடங்கிய குழுவினர், சிங்கப்பூர் இன்டர்நேஷனல் பவுன்டேஷன் இயக்குநர் ஜேரில் சான் அடங்கிய குழுவினர், டெமாசெக் பவுன்டேஷன் இயக்குனர் சிவன் அலி, பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி மற்றும் மருத்துவ உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து