திருவாரூர் வட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை : கலெக்டர் இல.நிர்மல் ராஜ் வழங்கினார்

திருவாரூர்; வட்டம் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க மாத்திரையை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
மாத்திரை
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது… 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) இன்றைய தினம் அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும் கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது ஏற்பாடு எனவே 1 முதல் 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.
1 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி செல்லும் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை அளவு அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படும். 2 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒரு மாத்திரை அளவு வழங்கப்படும். அல்பெண்டசோல் மாத்திரையை நன்றாக சப்பி சாப்பிட வேண்டும்.தேசிய குடற்புழு நீக்க நாளான்று விடுப்பட்ட குழந்தைகளுக்கு 1.03.2018 வியாழக்கிழமை அன்று மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவ,மாணவியர்கள் தனிநபர் இல்லக் கழிவறை இல்லாத வீடுகளில் உள்ளவர்களிடம் கழிவறையின் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டும். இதனால் சுகாதாரம் பேணி காக்கப்படும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் துணை இயக்குநர் மரு.எம்.செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சின்னத்துரை, மாவட்ட மலேரியா அலுவலர் பழனிசாமி, மாவட்ட கொல்லை நோய் அலுவலர் மரு.தேவிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.