ஐ.பி.எல் 9-வது லீக் போட்டி: மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் திரில் வெற்றி

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2018      விளையாட்டு
Delhi win 2018 04 14

மும்பை: ஐ.பி.எல் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் திரில் வெற்றி பெற்றது.

நல்ல தொடக்கம்
ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், எவின் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர்.  இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. லெவிஸ் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவும் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.

194 ரன்கள் குவிப்பு
அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 23 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்குவிக்க தவறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் பந்துவீச்சில் டேனியல் கிறிஸ்டியன், ராகுல் தெவாட்டியா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.


டெல்லி வெற்றி...
இதன்மூலம் டெல்லி அணியின் வெற்றிக்கு 195 ரன்களை மும்பை இந்தியன்ஸ் அணி இலக்காக நிர்ணயித்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி, கடைசி பந்தில், 3 விக்கெட் இழப்புக்கு, 196 ரன்கள் எடுத்து வென்றது. கேப்டன் கவுதம் கம்பீர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5.1 ஓவர்களில் 50 ரன்களுக்கு முதல் விக்கெட் இழந்தபோது, ஜாசன் ராய், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடினர். பந்த் 47 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வேல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஜாசன் ராய் ஆட்டமிழக்காமல், 53 பந்துகளில், 6 பவுண்டரி, 6 சிக்சருடன், 91 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெல்லி தனது முதல் வெற்றியை சுவைத்தது. அதே நேரத்தில் மும்பைக்கு மூன்றாவது தோல்வி கிடைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து