பாக். உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளை பிடிக்க பிரதமர் உத்தரவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் வீட்டின் மீது நேற்றுக் காலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நீதிபதி இஜாஸ்-உல்-அஷானின் வீடு, லாகூரில் உள்ள மாடல் நகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவிலும், காலை 9.00 மணியளவிலும் இரு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதில், வீட்டின் முகப்பு பகுதியில் கேட்டில் 2 குண்டுகளும், வீட்டின் சமையலறை பகுதியில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளன.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார், பஞ்சாப் மாகாண காவல் துறை டிஜிபியை அழைத்து விளக்கம் கேட்டார்.
உடனடியாக, நீதிபதி இஜாஸ்-உல்-அஷானின் வீடு, போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள், குண்டுகள் பாய்ந்த இடங்களில் இருந்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு வான் வழியில் இருந்து நடத்தப்பட்டதா? அல்லது தரை மார்க்கமாக நடத்தப்பட்டதா? என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார், சம்பவ இடத்தில் உடனிருந்து நிலைமையை கண்காணித்து வருகிறார் என்று அரசு தரப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, பஞ்சாப் மாகாண முதல்வர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தினர், லாகூர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல், பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்தான் காரணம் என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். இதனிடையே, குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்று போலீஸாருக்கு பிரதமர் அப்பாஸி உத்தரவிட்டுள்ளார்.