பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்றவற்றால் உருவான பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டு விட்டதாக உலக வங்கி கூறியுள்ளது. இந்த சீர்திருத்தங்களால் இந்திய பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை எட்டும். மேலும் 2019-ம் ஆண்டில் 7.5 சத வீத வளர்ச்சியை எட்டும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
தெற்காசிய பொருளாதார கவன அறிக்கை என்கிற அரையாண்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில், இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதால் தெற்காசிய மண்டல பொருளாதாரம் ஏற்றம் பெறும். மேலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக மீண்டும் உருவாகும். கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான முன்னணி நாடாக உருவாகவும் வாய்ப்புள்ளது. 2018-ம் ஆண்டில் தெற்காசியா 6.9 சதவீத வளர்ச்சியை எட்டவும், 2019-ம் ஆண்டில் 7.1 சதவீத வளர்ச்சியை எட்டவும் இந்தியா வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளது.