முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று முதல் சாலை பாதுகாப்பு வார விழா: விபத்தில்லா பயணம் சாத்தியமாக அனைவரும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: வேகம் விவேகமன்று என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும் என்று சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள சாலை பாதுகாப்பு வார விழா செய்திக் குறிப்பில்,
பொது மக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  “சாலைப் பாதுகாப்பு வாரம் இன்று முதல் 30-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 29-வது சாலைப் பாதுகாப்பு வார விழா, சாலை பாதுகாப்பு – உயிரின் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையப்படுத்துகிறது. சில சமயம் சாலை விபத்துகளினால் பொருளீட்டும் நபர்களை குடும்பங்கள் இழந்து வாடுகின்றன. அதனால் அக்குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் மிகுந்த துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

பாதுகாப்பான சாலைப் பயணத்தை உறுதி செய்யும் வகையில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணர்வு முகாம்களை நடத்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், அகில இந்திய வானொலி பண்பலை சேவைகளின் மூலம் நாள்தோறும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை ஒலிபரப்பு செய்தல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூடுதல் அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நெடுஞ்சாலை ரோந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இரவு பகலாக  போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், விபத்தில் சிக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த மீட்பு வாகனங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களை சீரிய முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, 2016ஆம் ஆண்டைவிட 2017ஆம் ஆண்டு சாலை விபத்துகள் 8.22 சதவிகிதம் குறைந்துள்ளதுடன், சாலை விபத்துகளினால் ஏற்படும் இறப்புகள் 6.16 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு விபத்து தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டாலும், “வேகம் விவேகமன்று” என்பதை உணர்ந்து, மிதமான வேகத்துடன் அனைவரும் கவனமாக சாலை விதிகளை கடைப்பிடித்தால் மட்டுமே விபத்தில்லா பயணம் சாத்தியமாகும்.  எனவே, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைப்பிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர் இழப்புகளைத் தவிர்க்க உதவ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து