முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தத்தெடுக்கும் விஷயத்தில் பெண் குழந்தைகளை அதிகம் விரும்பும் இந்திய தம்பதிகள்

திங்கட்கிழமை, 7 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இந்தியாவில் பெற்றோர் குழந்தைகளை தத்தெடுக்கும் வி‌ஷயத்தில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

பொதுவாக ஆண் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவே தம்பதிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் கருவிலேயே குழந்தைகள் ஆணா, பெண்ணா என கண்டறிந்து பெண் குழந்தைகளை அழிப்பது எல்லா மாநிலத்திலும் வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் குழந்தைகளை தத்தெடுக்கும் வி‌ஷயத்தில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளையே விரும்புகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கு சட்ட விதிமுறைகள் உள்ளன. இதன்படி முறையாக பதிவு செய்து  அதற்கான அமைப்புகள் மூலம் குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டில் இவ்வாறு  தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் 59.77 சதவீதம் பேர் பெண் குழந்தைகள் ஆவர். 40.23 சதவீதம் பேர் ஆண்  குழந்தைகள். 2017-2018 நிதி ஆண்டில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் 1858 பேர்  பெண் குழந்தைகள். 1418 பேர் ஆண் குழந்தைகள்.
2016-17-ம் ஆண்டில் 3210 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் 1915 பேர் பெண் குழந்தைகள். கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு மேல் பெண் குழந்தைகளையே தேர்வு செய்திருக்கிறார்கள். இதேபோல 2015-16-ல் 3677 பேர் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2295 பேர் பெண் குழந்தைகள். 2014-15-ல் 4368 பேர் தத்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 2555 பேர் பெண் குழந்தைகள். 2013-14-ம் ஆண்டில் 4354 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டதில் 2601 பேர் பெண் குழந்தைகள். 2012-13-ல் தத்தெடுக்கப்பட்ட 5002 குழந்தைகளில் 3050 பேர் பெண் குழந்தைகள்.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டிலுமே பெண் குழந்தைகளை தத்தெடுப்பதே அதிகமாக நடந்துள்ளது. இது சம்பந்தமாக ஒரு பெற்றோர் கூறும்போது, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை வளர்ப்பதே எளிதானது. அவர்களை கட்டுப்படுத்தி வளர்க்க முடியும். எனவேதான் பெண் குழந்தைகளை விரும்புகிறோம் என்று கூறினார்கள். நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகமாக உள்ளது. அங்கு 642 குழந்தைகள் கடந்த ஆண்டு தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 353 பேர் பெண் குழந்தைகள். அதற்கு அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு 256 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 168 பேர் பெண்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து