முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்பு 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு

சனிக்கிழமை, 21 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: 28-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் புது டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி சீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டம் டெல்லியில்  நடைபெற்றது. ஜி.எஸ்.டி. வரித் தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் முதன்முறையாக நடைபெறும் இக்கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி. வரி தாக்கலை எளிமையாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அவ்வகையில் ஆண்டுக்கு ஒருமுறை வரிதாக்கல் முறையை ஏற்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதனை இந்தாண்டு இறுதிக்குள் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கியப் பயன்பாட்டுப் பொருட்களான நாப்கின், கைத்தறிகள் மற்றும் கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட 30 பொருட்களின் மீதான வரியை குறைத்து அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றார். கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். விவசாயம், கூட்டுறவு வங்கி, கல்வி நிறுவன சேவைகளுக்கு வரிகுறைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமைச்சர் ஜெயகுமார் முன்வைத்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ. ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ள நிலையில் இக்கூட்டம் நடைபெறுவது  கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து