ஆன்டர்சன் பந்துவீச்சை சமாளிப்பது எப்படி? கோலிக்கு ஆலோசனை கூறிய மஞ்ச்ரேக்கர்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2018      விளையாட்டு
Anderson 2018 6 10

லண்டன்: இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்று, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியக் கேப்டன் விராட் கோலியும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர், ஸ்விங் மன்னன் ஜேம்ஸ் ஆன்ட்ர்சன் ஆகியோர் இந்தத் தொடர் அனைவரின்கவனத்தையும் ஈர்த்துப் பேசும் பொருளாக மாறி இருக்கிறார்கள்.

ஏனென்றால், கோலி தலைமையில் இந்திய அணி முதல் முறையாக இங்கிலாந்து வந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையில் இங்கிலாந்து வந்திருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கோலி, 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவரின் டெஸ்ட் சராசரி 13 ரன்கள் மட்டுமே கடந்த தொடரில் இருந்தது.

அதுமட்டுமல்லாமல், கடந்த தொடரில் கோலி ஆட்டமிழந்ததில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆன்டர்சன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரும்பாலும் ஆப்-ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிக்க முற்பட்டு, அது கேட்சாக மாறி விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொடரிலும் ஆன்டர்சன் பந்துவீச்சு இந்திய அணிக்கு சிம்மசொப்னமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆன்டர்சன் பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து பேட் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியக் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இஎஸ்பின் தளத்தில் சில ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் தொடருக்கு பின் விராட் கோலியின் பேட்டிங் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார், பேட்டிங்கில் பல்வேறு தொழில்நுணுக்கங்களை கற்றுள்ளார்.

ஆனால், டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது, ஆடுகளமும், பந்துவீச்சும் மாறுபடும். அதிலும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆன்டர்சன் பந்துவீச்சில் கடந்த தொடரில் விக்கெட்டை அதிகமாகக் கோலி இழந்திருப்பதால், மிகுந்த கவனத்துடனே எதிர்கொள்ள வேண்டும்.

ஆன்டர்சன் வீசும் பெரும்பாலான பந்துகள் ஆஃப்சைடை விலக்கியே செல்லும். அந்தப் பந்துகளை அடித்து விளையாடும் வகையில் பேட்ஸ்மேன்களை தூண்டிவிடும். ஆனால், அந்து பந்துகளை விராட் கோலி, தொடவே கூடாது. அதை விட்டுவிட வேண்டும்.

ஏனென்றால், அவுட்சைட் ஆஃப் சைட் பந்துகளைத் தொட்டால் எங்கு கேட்சாக மாறும் என்பது அறிந்தே அதிகமான பீல்டர்களை ஸ்லிப் திசையிலும், கல்லி பாயின்டிலும் நிறுத்தி இருப்பார்கள். ஏறக்குறைய 4 ஸ்லிப் பீல்டர்கள் வரைகூட நிறுத்தக்கூடும்.

மேலும், அந்தபோன்ற பந்துகளைக் கவர் டிரைவ் ஆட விராட் கோலி முயற்சித்தால் நிச்சயம் விக்கெட்டை இழந்துவிடுவார். ஏனென்றால், கவர் டிரைவ் ஆடும்வகையில் ஆன்டர்சன் பந்துவீசி விக்கெட்டை வீழ்த்த முனைவார். ஆனால், அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதிலும், ஆன்டர்சனைப் பொருத்தவரை விராட் கோலி அடிக்கும்வகையில் அவரின் பந்துவீச்சு வராது.

அதற்கு பதிலாக விராட் கோலி அதுபோன்ற பந்துகளை ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்றுவது பாதுகாப்பானது என நினைக்கிறேன். ஆனால், விராட் கோலி ஒரு கவர் டிரைவ் விரும்பி. ஆனால், இங்கிலாந்தில், அதிலும் ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவது கோலிக்கு ஆபத்தானது.

அதுமட்டுமல்லாமல், ஆன்டர்சன் வீசும் பந்து தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் சைட் வந்துகொண்டிருக்கிறது என்று கோலி நினைத்தால் அது தவறு. திடீரென்று ஒரு பந்து இன்ஸ்விங் ஆகிய ஸ்டெம்பை நோக்கி துல்லியமாகப் பாயும். அந்த பந்தையும் சரியாகத் தடுத்து விளையாடக் கோலி தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கால்காப்பில் வாங்கிக் கோலி வெளியேற வேண்டியது இருக்கும்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் வெர்னன் பிலாண்டர் இதுபோன்று விராட் கோலிக்கு ஆப் திசையில் வீசி, ஒருபந்தை இன்ஸ்விங் மூலம் உள்ளே இழுத்து நெருக்கடி கொடுத்தார் என்பது நினைவிருக்க வேண்டும்.

கோலிக்கு என்னுடைய அறிவுரை என்னவென்றால், ஆப்-சைடுக்கு வெளியே செல்லும் அனைத்துப் பந்துகளையும் கோலிவிட்டுவிட வேண்டும். அதேசமயம், இன்ஸ்விங் ஆகும் ஒரு பந்துக்காகவும் காத்திருந்து கவனமாகவும் விளையாட வேண்டும் அதற்கான மனநிலையைக் கோலி உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

தென் ஆப்பிரிக்கத் தொடரில் பிலாண்டர் பந்துவீச்சில் செய்த தவறுகளை விராட் கோலி இந்த முறை ஆன்டர்சன் பந்துவீச்சில் செய்துவிடக்கூடாது. ஏதாவது ஒரு பந்து இன்ஸ்விங் ஆகி ஸ்டெம்பை நோக்கி வரும்போது, காலை முன்நோக்கி எடுத்து வைத்து விளையாடுவது ஆபத்து. ஆன்டர்சன் பந்துவீச்சில் கவர் டிரைவ் ஆடுவதைத் தவிர்த்து, ஸ்கொயர் டிரைவ் ஷாட்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு மஞ்ச்ரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து