முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்த 14 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. ஒரு லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் தென்கரை உள்வட்டம் மேலக்கால் கிராமத்தை சேர்ந்த பிரேமாவின் மகன் ஞானபிரகாசம் மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும், வாடிப்பட்டி வட்டம் கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் ராஜ்குமார் குட்லாடம்பட்டி அருவியில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், வாடிப்பட்டி வட்டம் ரேத்தான் உள்வட்டம் போடிநாயக்கன்பட்டி கிராம உட்கடை பேட்டை புதூர் கிராமத்தைச் சேர்ந்த சென்ராயனின் மகன் திருப்பதி என்பவர் வாய்க்காலில் குளிக்கச் சென்றவர் கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில் பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஜெயலட்சுமி, ஸ்ரீநிதி ஆனந்த கிருஷ்ணன், நடராஜ் மற்றும் திருமுருகன் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்,

கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆரான் என்பவரின் மகன் குமார் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிணத்துக்கடவு வட்டம் தேவணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் சேவியர் பிரைட்டன் குமார் ஆழியார் அணையில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் போந்தவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகள் தர்ஷினி ஆலய திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பம் தரப்பு கே. திப்பனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பனின் மனைவி மூக்கம்மாள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் பட்டரைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சோலையப்பனின் மகன் காமாட்சி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும், அறந்தாங்கி வட்டம் பூவற்றக்குடி சரகம் திருநாளுர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவரின் மகன் மாரிக்கண்ணன் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 14 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து