முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை - மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு தமிழக அரசின் சார்பில் உடனடியாக ரூ.5 கோடி நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
          கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து, அங்குக் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி இருப்பதாக மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
நிலச்சரிவில்...
          இடுக்கி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி 10 பேர் இறந்துள்ளனர். தேவிகுளம் தாலுகாவில் உள்ள அடிமாலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தனர், இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இருவர் தேவிகுளம் தாலுகாவில் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர். இடுக்கி தாலுகாவிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை.
வெள்ளம் ஓடுகிறது...
          மலப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், கண்ணூரில் 2 பேரும், வயநாடு மாவட்டத்தில் ஒருவரும் நிலச்சரிவு மற்றும் மழைக்குப் பலியாகியுள்ளனர். மேலும் வயநாடு, பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் 3 பேரைக் காணவில்லை. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலையார் அணையில் இருந்து 600 கனஅடி நீர் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பெரியாற்றில் வெள்ளம் ஓடுகிறது.
          கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு நகருக்கும், மத்திய மற்றும் வடக்கு கேரளப் பகுதிக்கும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். கனமழை காரணமாக இடுக்கி, கொல்லம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
சொல்லமுடியாத...
          இதற்கிடையே கடுமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு உடனடி நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,
கேரளாவில் சில மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பொதுமக்களின் உடமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது கேரள மக்களுக்கு சொல்ல முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக...
          தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்த அனைவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி மீட்புப்பணி மற்றும் நிவாரணம், புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வரவிருக்கும் நாட்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பாகவும் கேரள அரசுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
          மேலும், கேரள அரசுக்கு தேவைப்படும் வேறு எந்த உதவியும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து