பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தேவை: ஐ.நா. பொதுச் செயலர்

நியூயார்க்,பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச அளவில் ஆதரவு தேவை என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறினார்.
பாக்தாத் நகரில் உள்ள ஐ.நா. வளாகத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் நினைவாக, ஆகஸ்ட் 21-ஆம் தேதியை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்கும் தினமாக கடைப்பிடிப்பதற்கு கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு தினத்தையொட்டி, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோகுட்டெரெஸ்
கூறியதாவது:
பயங்கரவாதம், சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதில், ஐ.நா. கூட விட்டு வைக்கப்படவில்லை. ஐ.நா.வும், பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.
தஜிகிஸ்தான் முதல் பிரிட்டன் வரை, பாக்தாத் முதல் பார்சிலோனா வரை பயங்கரவாதத்தின் தாக்குதல்கள் நம்மை உலுக்கியிருக்கின்றன.
பயங்கரவாத தாக்குதல் நடைபெறாத நாடே இல்லை என்று கூறலாம். பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆப்கானிஸ்தான், இராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில்தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பலர் தங்களுடைய உறவினர்களையும், நண்பர்களையும் இழந்துள்ளனர்.
தினந்தோறும் வேலைக்குச் சென்று வந்த சாமானியர்களின் வாழ்க்கை, பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முற்றிலும் நிலைகுலைந்து விடுகிறது அல்லது திசை மாறிவிடுகிறது.
எனவே, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வேதச அளவில் ஆதரவு தேவைப்படுகிறது. என்றார் அவர்.