மனித உரிமை ஆர்வலர்கள் கைது குறித்து ராகுல் டுவிட்டரில் கருத்து

புதன்கிழமை, 29 ஆகஸ்ட் 2018      இந்தியா
rahul 2017 10 10

புது டெல்லி : நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு மட்டும்தான் இடமா? மற்ற தொண்டு நிறுவனங்களை மூடிவிட வேண்டுமா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாகச் சாடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகராஷ்டிராவில் பீமா - கோரேகானில் கடந்த ஜனவரி 1-ம் தேதி நடந்த கலவரத்தில் தொடர்புள்ளதாகவும், மாவோயிஸ்ட்கள் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டியும் மனித உரிமை ஆர்வலர்கள் பலரின் வீடுகளில் புனே போலீசார் திடீர் ரெய்டு நடத்தி இடதுசாரி சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களை கைது செய்தனர்.  இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள் என்று போலீஸார் குற்றம்சாட்டி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

போலீசாரின் இந்தக் கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-

நாட்டில் ஒரே ஒரு தொண்டுநிறுவனம் செயல்படத்தான் அனுமதி. அது மட்டும்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆர்.எஸ்.எஸ். நாட்டில் செயல்பட்டு வரும் மற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களை எல்லாம் மூடி விடுங்கள். அனைத்து மனித உரிமை ஆர்வலர்களையும், சமூக ஆர்வலர்களையும் சிறையில் தள்ளி விடுங்கள். யார் மீதெல்லாம் புகார் இருக்கிறதோ அவர்களை சுட்டுக் கொல்லுங்கள். புதிய இந்தியாவை வரவேற்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து