இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியில் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      விளையாட்டு
Prithivisha 2018 9 4

ஓவல், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கவலை அடைந்துள்ள இந்திய அணி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிருத்வி ஷாவை களமிறக்க முடிவு செய்துள்ளது. இது அவரது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமையும்.

தொடரை இழந்தது...இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

விஜய் - ராகுல்...இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து அவரை நீக்கிவிட்டு கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். அவரும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

பிருத்வி ஷா...அவருக்கு பதிலாக பிருத்வி ஷா களமிறங்குகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்ட பிருத்வி ஷா, சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஏ அணிக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவரது பேட்டிங் நம்பிக்கை அளிக்கும்படி இருந்தது. அதோடு 14 முதல் தரபோட்டியில் விளையாடியுள்ள பிருத்வி ஷாவின் சராசரி 56.72. ஐந்தாவது போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் பிருத்வி ஷாவால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் இதனால் அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து