மியான்மர் நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை: விடுதலை செய்ய ஐ.நா.சபை வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018      உலகம்
Myanmar journalists 2018 9 4

ரங்கூன் : மியான்மர் நாட்டில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பத்திரிகையாளர்களை விடுதலை செய்யுமாறு, மனித உரிமைகளுக்கான ஐ.நா.சபை மியான்மர் அரசை வலியுறுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

மியான்மரின் வடக்கு பகுதியான ராக்கைன் மாநிலத்தில், ரோஹிங்கியா இன முஸ்லீம்கள் மீது கடந்த ஆண்டு ராணுவத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில், சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டின. மேலும், ரோஹிங்கியா இன பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றனர்.

7 ஆண்டுகள் சிறை

இந்நிலையில், ராணுவத்தின் இந்த வன்முறை செயல்களை ராய்ட்டர்ஸ்  பத்திரிக்கை நிறுவனத்தைச் சேர்ந்த யோ லோன் (32), யாவ் சோ ஒ(28) ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் செய்தியாக வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து, நாட்டின் ரகசியத்தை திருடியதாக போலீசார் பத்திரிகையாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.  நீதிமன்றம் அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.ஆனால் கைதான பத்திரிகையாளர்களோ, இண்டின் எனும் கிராமத்தில் சட்ட மீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றுள்ளனர். அப்போது தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார், சில ஆவணங்களை தங்களிடம் கொடுத்து ஓட்டலை விட்டு வெளியேறியதும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்தனர்.

ஐ.நா. மனித உரிமை...

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு, மியான்மர் அரசை வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மனித உரிமைகளுக்கான ஐ.நா. சபையின்  உயர் அதிகாரி மிச்செல் பச்செலெட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’விசாரணை முறைகளுக்கான சர்வதேச அளவீடுகளை மீறிய வகையில் இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  இதன் மூலமாக மியான்மரில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் அச்சமின்றி செயல்பட முடியாது. ஒன்று தங்களை மிதப்படுத்தி கொள்ள வேண்டும், அல்லது வழக்கை சந்திக்கும் சவாலை ஏற்க வேண்டும் என்னும் தவறான செய்தியை இந்த வழக்கின் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து