முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு- 377-வது சட்டப் பிரிவும் ரத்து

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்றும், அதற்கு எதிரான சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்வதாகவும் சுப்ரீம் கோர்ட்  அரசியல் சாசன அமர்வு  பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

ஓரினச்சேர்க்கையை குற்றமாக வரையறுக்கும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு   இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி ஓய்வு பெற இருப்பதால் அவர் வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது மாறியுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஓரினச்சேர்க்கை அங்கீகரிக்கப்படாததால், அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அதற்கேற்ப இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவில் ஓரினச்சேர்க்கை என்பது குற்றச் செயல் என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலின் தன்மையைப் பொருத்து அதற்கேற்ப 10 ஆண்டுகள் வரையோ அல்லது ஆயுள் சிறையோ கூட விதிக்க அந்த சட்டப் பிரிவு வழிவகுக்கிறது.

இந்நிலையில், அந்த விதியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்  மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முக்கியமாக சுய விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மறுபுறம் ஓரினச்சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் மீதான இறுதிகட்ட விசாரணை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, ஓரினச்சேர்க்கைக்கு எதிராக மனுதாக்கல் செய்திருந்தவரின் தரப்பில் ஆஜரான வழக்கரிஞர் 377-ஆவது சட்டப் பிரிவை நீக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்தார். ஒரு சட்டத்தை திருத்த வேண்டுமா? அல்லது நீக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்ய வேண்டியது நாடாளுமன்றம் மற்றும் பேரவைகளின் வேலை என்று அவர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒருவேளை அத்தகைய சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்குமானால், அதை அரசாங்கமே திருத்தட்டும் என நீதிமன்றங்கள் காத்துக் கொண்டிருக்காது எனத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிற மனுதாரர்களின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.

ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதும் இந்திய அரசியல் சாசனத்தின் 377வது சட்டப்பிரிவு 1860ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

பிரிட்டனில் ஓரினச் சேர்க்கை குற்றமாகக் கருதப்பட்டு, 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதே சரத்துகளுடன் இந்திய அரசியல் சாசனத்திலும் இந்த சட்டம் இடம்பெற்றிருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் இதுவரை இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்திய அரசியல் சாசனம் 377வது பிரிவை நீக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று  சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பிற சமூகத்தினருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் போலவே ஓரினச் சேர்க்கை சமூகத்தினருக்கும் உரிமைகள் உள்ளன. எனவே இயற்கைக்கு மாறான உடலுறவு என குற்றம் சொல்லும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 377ஐ ரத்து செய்வதாக  சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஒருவரது விருப்பத்துக்கு தடை விதிப்பது மரணத்துக்கு சமம் என்று  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து