முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை ஏற்பு: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் கால அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்பு - தமிழக அரசு தகவல்

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 30-ம் தேசி வரை செயல்படும் என்று மத்திய தமிழக அரசு அறிவித்துள்ளது.

அமைச்சருடன் சந்திப்பு

மத்திய நுகர்பொருள் விவகாரங்கள், பொதுவினியோகம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை, தமிழக அரசின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு துறை அமைச்சர் காமராஜ் டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களின் கொள்முதல் கால அளவினை நீட்டிப்பு செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தை அமைச்சர் காமராஜ், மத்திய அமைச்சர் பஸ்வானிடம் நேரில் வழங்கினார்.

நேரடி நெல் கொள்முதல்...

தமிழக அரசு 2002-ல் இருந்து மையப்படுத்தப்பட்ட கொள்முதல் அமைப்பு முறையைப் பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் சார்பாக தமிழக உணவுப் பொருள் நிறுவனம் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட காரிப், ராபி பயிர் சாகுபடி பருவங்களுக்கான நெல் கொள்முதல் காலமானது, நீர்ப்பாசன முறையை உள்ளிட்ட வெளிக் காரணிகளால் தமிழகத்தின் பயிர் சாகுபடி முறையுடன் ஒத்துப் போகவில்லை. தமிழகத்தில் குறுவைப் பருவத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அக்டோபர் வரையிலான காலத்தில் நெல் அறுவடை நடைபெறுகிறது. இது போன்ற சூழல் காரணமாக ஜூலை மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை நீட்டிக்குமாறு தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

முதல்வர் கடிதம்...

எனினும், மத்திய நுகர்வோர், உணவு, வினியோக அமைச்சகம் நிகழாண்டு கொள்முதல் காலத்தை ஆகஸ்ட் வரை மட்டுமே நீட்டிக்க அனுமதி அளித்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்த உத்தரவானது செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு நெல் கொள்முதல் காலத்தை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை மத்திய அரசு ஏற்று கொண்டதை தொடர்ந்து, தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப். 30-ம் தேதி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விவசாயிகள், தங்களது நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெற வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்.

அமைச்சர் காமராஜ் அறிக்கை

இந்த நிலையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப்கொள்முதல் பருவம் 2017-18ல், 31-ம்தேதி முடிய மட்டுமே நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. டெல்டா மாவட்ட வேளாண் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ரூபாய் 115.67 கோடி மதிப்பிலான சிறப்பு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தினை அரசு அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தியதின் பயனாக, டெல்டா மாவட்டங்களிலிருந்து தொடர்ந்து நெல் அறுவடை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வரும் நிலையில், 1.9.2018-க்கு பிறகும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு விவசாயிகளின் கோரிக்கைகளையும், நலனையும் கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இது சம்பந்தமாக பிரதமர் மோடி மற்றும் மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானுக்கு கடிதம் அனுப்பினார்.

காலநீட்டிப்பு

மேலும், மத்திய அரசு நல்ல முடிவினை எடுக்க அறிவுறுத்தும் பொருட்டு மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானை புதுடில்லி சென்று நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கையினை அவரிடம் எடுத்துரைக்க, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உணவுத்துறை செயலாளர் தயானந்த்கடாரியா, ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட காலநீட்டிப்பு கோரினர்.

30-ம் தேதி வரை

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, 30-ம் தேதி வரை நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட கால நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பித்தது. இதன் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து 30-ம் தேதி வரை செயல்படும். தமிழ்நாடு விவசாயிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் தங்களது நெல்லை விற்பனை செய்து பயன் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து