தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை அழகப்பா பல்கலைக்கழத்தில் நடைபெற்றது:

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      சிவகங்கை
26 alagappa news

   காரைக்குடி.-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் QS  தரம் மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்துப்பட்டறை பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் நடைபெற்றது.  இக்கருத்துப்பட்டறையின் முக்கிய நோக்கம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே QS  தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் QS  தரவரிசையில் இடம்பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை தெரிந்துகொள்ளுதல் ஆகும்.
 பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இக்கருத்துப்பட்டறையை தொடங்கி வைத்து உரை நிகழ்த்துகையில் QS  என்பது ஒரு கல்வி நிறுவனத்தின் தரத்தையும் அதன் தனிப்பட்ட தன்மையையும் குறிக்கும் அடையாளமாகும்.  மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் உட்பட பலரின் உலகலாவிய நம்பகதன்மையை பெற்றுள்ளது.  தற்போதைய உலகலாவிய சூழலில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு QS  உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினார்.  மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் 9000 கல்வி நிறுவனங்களில் QS-BRICS   தரவரிசை-2019-ல் 104-வது இடத்தையும்,  QS-INDIA  தரவரிசையில்   20-வது இடத்தையும் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இதற்கு முக்கிய காரணம் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த துணைவேந்தர்கள், அதிகாரிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே ஆகும் என்றார்.
 மேலும் அழகப்பா பல்கலைக்கழகம்  QS-ASIA பல்கலைக்கழக தரவரிசை-2019-ல் 505 தரம்பெற்ற பல்கலைக்கழகங்களின் வரிசையில் அழகப்பா பல்கலைக்கழகம் 216-வது இடத்தை பெற்றுள்ளது என்றும், QS-INDIA-ASIA தரவரிசையில் இந்திய அளவில் 24-வது இடத்தை பெற்றுள்ளது என்பதையும் பெருமையுடன் தெரிவித்தார்.  தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மட்டுமே இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 பெங்களுரு QS-I GAUGE மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் .சந்தோஷ் கருணானந்தா தமது சிறப்புரையில் போட்டிகள் நிறைந்த கல்விச் சூழலில் QS  உலக பல்கலைக்கழக தரவரிசையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.  மேலும் QS  தரத்திற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு அளவீடுகள் குறித்து எடுத்துக்கூறி அவற்றில் முக்கியமாக பேராசிரியர்களின் தரம், மாணவர்களின் பன்முகத்தன்மை, வேலைவாய்ப்பு, கற்றல் மற்றும் கற்பித்தல், மேம்படுத்தப்பட்ட வசதிகள், சமுக பொறுப்புகள் மற்றும் தரமதிப்பீடு ஆகியன அடங்கும்.  மேலும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரம் மற்றும் மதிப்பீடு குறித்து தெளிவாக விளக்கினார்.  உலகளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நற்பெயரை பெறுவதற்கு இந்த  QS-I GAUGE மதிப்பீடு உறுதுணையாக இருக்கும் என்றார்.
 சர்வதேச அளவில் பல்கலைக்கழகத்தினுடைய பெருமையையும், வளர்ச்சியையும் எடுத்துச்செல்லும் வகையில் பெங்களுருவில் செயல்பட்டுவரும் QS-I GAUGE  மதிப்பீடு நிறுவனத்துடன் அழகப்பா பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.  மேற்படி நிறுவனம் 9 அளவீடுகள் மூலமாக 70 குறிகாட்டிகள் அடிப்படையில் டைமன்ட் பிளஸ், டைமன்ட், கோல்டு மற்றும் சில்வர் என்ற தரமதிப்பீட்டினை வழங்கும்.  இந்த மதிப்பீடானது லண்டனிலுள்ள QS  நுண்ணறிவு பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு  மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
 இக்கருத்துப்பட்டறையில் புல முதன்மையர்கள், இயக்குனர்கள், பேராசிரியர்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளைச் சார்ந்த முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 
 பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் ஹா.குருமல்லேஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார்.  கல்லூரி வளர்ச்சிக் குழுமம் முதன்மையர், பேராசிரியர் எஸ். இராஜமோகன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து