முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்சப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு மாற்றாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா

திங்கட்கிழமை, 3 டிசம்பர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு மாற்றாக நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் மாணவ,மாணவிகளும்,ஆசிரியப் பெருமக்களுக்கும் விதவிதமான உணவுகளை வீட்டிலிருந்து கொண்டு வந்து ஒன்றாக அமர்ந்து பகிர்ந்து உண்ட நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைத்தது.
திருமங்கலம் அருகேயுள்ள உச்சப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 243மாணவ,மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் புதுமையான நேரடி செயல் விளக்கங்கள் மூலமாகவும்,எளிமையான முறையில் கற்பிப்பதன் மூலமாகவும் மாணவ,மாணவிகள் பாடங்களை விரைவில் புரிந்து கொண்டு தேர்வுகளில் சாதித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதன் ஒருபகுதியாக பள்ளிக் குழந்தைகளிடையே பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த உணவுத் திருவிழாவை தலைம ஆசிரியை சாந்தி முன்னிலையில் வட்டார கல்வி அலுவலர் பேபி தொடங்கி வைத்து மாணவ,மாணவிகளுக்கும்,ஆசிரியப் பெருமக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.அதன் பின்பு பள்ளி மாணவ,மாணவிகளும்,ஆசிரியப் பெருமக்களும் தங்களது வீடுகளில் தயார் செய்யப்பட்ட விதவிதமான பாரம்பரிய உணவுகளை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.குறிப்பாக சிறுதானிய உணவுகள்,பாரம்பரிய திண்பண்டங்கள்,பழம்பெருமைமிகு பழரசங்கள் என பல்வேறு உணவு வகைகள் இந்த உணவுத் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
மேலும் பாரம்பரிய உணவுகளின் அருகிலே அவற்றின் பெயர்களும்,அவற்றின் சிறப்புகள் குறித்த வாசகங்களும் இடம்பெற்றிருந்தது. இதன் மூலமாக மறக்கப்பட்ட உணவுகளை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வந்து பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பள்ளிக் குழந்தைகளின் உடல்நலனை பாதுகாப்பதே இந்த பாரம்பரிய உணவுத்திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.கண்காட்சியில் பங்கேற்ற அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகள் மற்றும் பழரசங்கள் குறித்து அனைவருக்கும் அறிமுகம் செய்து அவற்றின் பயன்களை எடுத்துக் கூறினார்கள்.பின்னர் நிறைவாக பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் ஒன்றாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தார்கள்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை சாந்தி தலைமையில் ஆசிரியப் பெருமக்கள் கண்ணன்,ராபர்ட்ராஜாசிங்,ரேவதி,இந்திராகாந்தி,சிவன்ஜோதி,சத்தியஷீலா,அழகர்சாமி,ஷேக்மைதீன்,உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக்ராஜன் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து