முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்: சென்னையில் இன்று 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் இன்று 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

துணை-முதல்வர் முன்னிலை...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் தமிழக விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு பேசுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நிறைவுரையாற்றுகிறார்.

பொருட்காட்சி அரங்குகள்

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி மற்றும் 10-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது.  2-வது முறையாக மீண்டும் நடக்கும் இம்மாநாட்டில் முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டையொட்டி அமைக்கப்படும் 250-க்கும் மேற்பட்ட பொருட்காட்சி அரங்குகளில் தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் கூட்டாளர் நாடுகள் ஆகியோரின் தயாரிப்பு மற்றும் சேவைகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதில் மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் வாகன உதிரி பாகங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாய வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்னணு சாதனங்கள் போன்ற தொடர்புடைய 12 முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

காலை 10 மணிக்கு...

மாநாட்டில் காலையில் ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்த முதலீட்டாளர்கள் கருத்தரங்கும், பகல் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கும் நடக்கிறது. அதன் பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை 9 மணி முதல் பெயர் பதிவு செய்யப்படும். 10 மணிக்கு மாநாடு துவங்குகிறது. தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி, புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல், எதிர்பார்க்கப்படும் சவால்களை சமாளித்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு பிற்பகல் 2 மணிக்கு துவங்கும்.

2-ம் நாள் மாநாடு

நாளை  24-ம் தேதி 2-ம் நாள் மாநாடு துவங்குகிறது. தொழில்துறை கட்டமைப்பில் தொழில்துறை காரிடார் கட்டமைப்பில் தமிழ்நாட்டின் புதிய பரிமாணம் என்னும் தலைப்பில் 6 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டில் மதம் சுகாதாரம் பாரம்பரியம் சுற்றுலா ஆகிய துறைகளில் முதலில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இந்து, அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் உள்பட 8 பேர் உரையாற்றுகிறார்கள். தமிழ்நாட்டை எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி கேந்திரமாக மாற்றுதல் என்னும் தலைப்பில் அறிவியல் தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு உள்பட 6 பேர் உரையாற்றுகிறார்கள்.

துணை ஜனாதிபதி...

தமிழ்நாட்டில் வேளாண் உணவு பதப்படுத்தும் தொழில் துறையில் வாய்ப்புகள் குறித்த உரையாடல் நடைபெறுகிறது. இதே போல தமிழ்நாட்டில் ஜவுளித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள், கட்டிட நிர்மாணம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து 10 பேர் உரையாற்றுகின்றனர். சேமிப்புக் கிடங்கு துறை மற்றும் சென்னை அடுத்த தலைமுறைக்கான நிதிவள கேந்திரமாக உருமாற்றுதல் என்னும் தலைப்பில் 15 பேர் உரையாற்றுகின்றனர். பிற்பகல் 3 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அதையடுத்து நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு நிறைவுரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து