முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று அம்மா நினைவிடத்தில் வெற்றி மாலையை சமர்ப்பிக்க வேண்டும் - ஜெயலலிதாவின் 71 - வது பிறந்த நாளையொட்டி தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கடிதம்

சனிக்கிழமை, 23 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாராளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வென்று அம்மா நினைவிடத்தில் வெற்றி மாலையை சமர்ப்பிக்க உறுதி ஏற்க வேண்டும் என்று ஜெயலலிதாவின்

71-வது பிறந்த நாளையொட்டி

தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், ஜெயலலிதா 1998-ம் ஆண்டு அமைத்தது போல தேச நலன் காக்கும் வெற்றி கூட்டணியை இப்போது அமைத்திருக்கிறோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுதியுள்ள மடலில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மாவின் 71-வது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய தன்னிகரில்லாத மக்கள் இயக்கமாகிய நம் அ.தி.மு.க.வை தனது வாழ்வின் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்த அற்புதமான அரசியல் ஞானி புரட்சித்தலைவி அம்மா. அவருடைய அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும், பன்முகத் திறமைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அனைவரையும் உள்ளார்ந்த அன்புடன் அவர் நேசித்ததையும் கழக உடன்பிறப்புகளாகிய நாம், அவரோடு நேரடியாகப் பழகிய அனுபவத்தால் எண்ணி, எண்ணி வியந்துபோகிறோம்.

அதிசயப் பிறவி அம்மா...

‘‘அம்மா’’வைப் போல இன்னும் ஓர் அதிசயப் பிறவி, இனி ஒருவர் தோன்ற முடியுமா? என்று திகைத்து நிற்கிறோம். ஒரு பள்ளி மாணவியாக அம்மா நிகழ்த்திய சாதனைகளையும், படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு, நாட்டியம், இசை போன்ற திறன் வளர்க்கும் துறைகளிலும் புரட்சித் தலைவி அம்மா, தன்னிகரின்றி திகழ்ந்ததையும் அவருடன் பள்ளிப் பருவத்தில் உடன் இருந்தவர்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து வியக்கிறார்கள். அம்மா தனது 15-வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த போது, வயதிலும், அனுபவத்திலும், திறமையிலும் மூத்தவர்கள் பலர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் தனது தனித் தன்மையால் கலை உலகின் தங்கத் தாரகையாக நம் அம்மா மிளிர்ந்தார்.

அரசியல் அனுபவம்...

அம்மா தன்னுடைய சிறப்புமிக்க குணநலன்களால் எம்.ஜி.ஆரின் மதிப்பிற்கு உரியவரானார். புரட்சித் தலைவி அம்மாவின் எதிர்காலம் எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்த எம்.ஜி.ஆர்., 1982-ம் ஆண்டு அவரை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி, நம் இயக்கத்தை வழிநடத்தத் தேவையான பயிற்சிகளை வழங்கினார். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக, அம்மாவை புதுடெல்லிக்கு அனுப்பி, அரசியல் அனுபவங்களைப் பெறவைத்தார். பாராளுமன்ற அனுபவங்களால் அரசியல் வாழ்வுக்குத் தேவையான பயிற்சிகள் பலவற்றைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அண்ணா தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஆற்றிய பணிகளால் இன்று, அண்ணா தி.மு.க. இந்திய அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது.தமிழகத்தின் முதலமைச்சராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றிய புரட்சித் தலைவி அம்மாவின் மனிதாபிமானம் மிக்க ஆட்சிமுறையாலும், தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை அவர் செயல்படுத்தியதாலும், இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு வளர்ந்திருக்கிறது.

சாதனைகள்

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் நலன் காத்தல் என்று ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது. புரட்சித் தலைவி அம்மாவினால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய அன்பு உடன்பிறப்புகளாகிய நாம், அம்மாவின் நினைவைப் போற்றி, புகழ்ந்து, நினைத்து, நெஞ்சம் உருகி அவரை வணங்கும் இந்த வேளையில், நாம் அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது. நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்திவிட்டு நம் அம்மா மறைந்தாலும், பக்குவத்தோடும், ஒற்றுமையோடும் செயல்பட்டு, நம் அம்மா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பல்வேறு சோதனைகளுக்கிடையே கழகத்தைக் காத்திருக்கிறோம். புரட்சித் தலைவர் நமக்களித்த வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்டிருக்கிறோம். கழக அரசை மக்கள் அனைவரும் போற்றும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக நடத்தி வருகிறோம்.

சாதனைகள் தொடர உறுதி

அம்மா காட்டிய பாதையில், அவர் செய்த சாதனைகள் தொடரும் வகையில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறோம். இந்த சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்திட உறுதி ஏற்று உழைக்கிறோம். அதுவே நாம், நம் அம்மாவுக்கு செலுத்தும் நன்றிக் கடன். பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 1998-ம் ஆண்டு அம்மா அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை இந்தத் தேர்தலுக்காக நாம் உருவாக்கியுள்ளோம். அ.தி.மு.க. என்றைக்கும் தனது அடிப்படைக் கொள்கைகளான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், ஏழை, எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு, தமிழ் இன எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணத்தைத் தொடரும். அதுதான், எத்தகைய களமாக தேர்தல் களம் அமைந்தாலும் நமது நிலைப்பாடு. அப்படித்தான் இப்பொழுதும் தனது பாதையையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு கழகம் நிற்கிறது.

உழைப்போம்

அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றிகளை எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பெற்று அந்த வெற்றியை அம்மாவுக்கு வெற்றி மாலையாக அவர் நீடு துயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பிக்க நாம் உறுதி ஏற்க வேண்டும். நம்மை எல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மாவின் பிறந்த நாளில் நாம், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், அயராது உழைப்போம். உழைப்போம். உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்போம். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து