முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கோலாகலம் - சிலைக்கு மாலையணிவித்து ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் மரியாதை - 71 கிலோ கேக் வெட்டினார் முதல்வர் எடப்பாடி

ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது சென்னை, ராயப்பேட்டை, அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் ஜெயலலிதாவின் சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மலர்தூவி மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது,. சென்னையில் உள்ள அதிமுக தலைமைக்கழக அலுவலகம் முழுவதும் அதிமுக கொடிகளும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன, அதிமுக அலுவலகத்தை நோக்கி காலையிலிருந்தே தொண்டர்கள் குவிந்தனர், காலை 10 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக்கழகம் வந்தனர் அவர்களை ஜெயலலிதாவின் புகழ் ஒங்குக என்று முழக்கங்களை எழுப்பி தொண்டர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர், இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலையணிவித்தனர், அதைத்தொடர்ந்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மலர் வெளியீடு

அதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வரும் ஓ. பன்னீர்செல்வமும் ``புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள `ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட, முதல் பிரதியை அதிமுக அவைத் தலைவர். மதுசூதனன் பெற்றுக்கொண்டார்,.பின்னர், கட்சி பணிகளை ஆற்றுவதற்கு வசதியாக,மதுசூதனனுக்கு அதிமுக சார்பில் இன்னோவா வாகனம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெருந்திரளாகக் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் கமலக்கண்ணன் ஏற்பாட்டின்பேரில், அதிமுக அரசின் சாதனைகள் விளக்கப் பிரச்சார வாகனத்தை முதல்வரும் துணை முதல்வரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

குறுந்தகடு வெளியீடு

இதைத்தொடர்ந்து, அதிமுக அலுவலக வளாகத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருமான டாக்டர். விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர். இந்த முகாமில், பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இருதய சிறப்பு பரிசோதனை, தோல், கண், பல் மற்றும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகளும், ரத்தப் பரிசோதனை, குடலியல் பரிசோதனை, மூட்டு வலி மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை, மற்றும் சர்க்கரையின் அளவு கண்டறிதல் உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டு, உரிய மருந்து மாத்திரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இதன்பின்னர்  இலக்கிய அணிச் செயலாளரும், தமிழ் நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான . வளர்மதி, கழக இலக்கிய அணியின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த, ``அம்மாவின் அரசு’’ என்ற அதிமுக கொள்கை பிரச்சாரப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டனர். அதிமுக மகளிருக்கு புடவைகளும்.ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதிமுக தலைமை கழகத்தில் நடந்த விழாவில் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், டாக்டர் ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பார்லிமெண்ட் துணை சபாநாயகர் தம்பிதுரை, துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் எம்.பி., கே.பி.முனுசாமி, , அமைப்பு செயலாளர்கள் எஸ்.கோகுல இந்திரா, ஜே.சி.டி. பிரபாகர், மைத்ரேயன் எம்.பி., ஆதிராஜாராம், டாக்டர் வைகை செல்வன், எம்.பி.க்கள் எஸ்.ஆர். விஜயகுமார், டாக்டர் ஜெயவர்த்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.பி.கந்தன், இலக்கிய அணி இணை செயலாளர்கள் டி.சிவராஜ், நடிகர் ஜெயகோவிந்தன், துணை செயலாளர் இ.சி.சேகர், வடசென்னை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், , வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆ.பழனி, பி.சின்னையன், மற்றும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

71 கிலோ எடையுள்ள கேக்

முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளையொட்டி 71 கிலோ எடையுள்ள கேக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு வழங்கினர்  அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன் ஏற்பாட்டின்பேரில், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 71 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஊட்டினார், அதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு ஊட்டினார், முடிவில் இருவரும் சேர்ந்து கேக்கை வெட்டி தமிழ்மகன் உசேனுக்கு ஊட்டினர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து