முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டிலிருந்தே கணினி மூலம் பிறப்பு சான்றிதழ் பெறும் புதிய திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, மாநிலத்தில் எந்த பகுதியில் வசி்ப்போரும் பிறப்பு - இறப்பு சான்றிதழை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சென்னை மாநகராட்சி பகுதியில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளப்படுகிறது. இதே போன்று மாநிலம் முழுவதும் ஒரே இணையதளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில், பிறப்பு மற்றும் இறப்பு (பதிவு முறை ) மென்பொருளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளேன். இதனால் மாநிலத்தில் எந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை, எந்த ஒரு இ -சேவை மையத்திலிருந்தோ, வீட்டிலிருந்தோ கணினி மூலமாகவோ அல்லது கணினி மையத்திற்கு சென்றோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆரம்ப சுகாதார சேவைகளில் ஆய்வகங்களின் பங்கு இன்றியமையாததாகும். நோயை சரியாக கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க ஆய்வகங்களின் செயல்பாடு மிக முக்கியமானதாகும். எனவே தான், ஆய்வகங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும் ஆய்வக நுட்புநர்களை பணியமர்த்தியும், புதிய ஆய்வக உபகரணங்கள் வழங்கியும் இந்த அரசு ஆய்வகங்களை செம்மைப்படுத்தியுள்ளன. மேலும் நோயாளிகளின் ரத்த மாதிரிகள் உயர் ஆய்வக பரிசோதனைக்காக கொண்டு செல்ல, ஆய்வக தகவல் மேலாண்மை அமைப்பு என்னால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வகங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்திற்கிணங்க மருத்துவத்துறையில் தற்பொழுது நடைமுறையில் உள்ள அனைத்து நவீன சிகிச்சைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நவீன வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் இதை பயன்படுத்தி, நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல, தாய் சேய் நல மருத்துவமனை 175-வது ஆண்டை அடியெடுத்து வைக்கின்ற இந்தத் தருணத்தில், இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து