முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துடன் சந்திப்பு: கூட்டணி குறித்த தகவல் 6-ம் தேதிக்குள் வெளியாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

திங்கட்கிழமை, 4 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், கூட்டணி குறித்த தகவல் 6-ம் தேதிக்குள் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தலைமையிலான அணியில் பா.ஜ.க, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம்பெறுகிறது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆலோசனை...

இதற்கிடையே தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சந்தித்து பேசினார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று மாலை 5.45 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் வந்தனர். விஜயகாந்த்துக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து அவரிடம் உடல் நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து சுமார் 45 நிமிடங்கள் வரை இருவரும் ஆலோசனை நடத்தினர்.

பேச்சுவார்த்தை....

இந்த ஆலோசனைக்கு பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தை உடல்நலம் குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அவர் பூரண குணமடைந்து ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களிடம் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் பேசினார். அவர் உடல்நலத்தோடு பூரண ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டோம். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில் நாளை (இன்று) நல்ல முடிவு எட்டப்பட்டு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.

உறுதியாக...

வரும் 6-ம் தேதிக்குள் அனைத்துக் கட்சிகளுடனான கூட்டணி குறித்த தகவல் அறிவிக்கப்படும். மேலும்,  அன்று நடைபெறும் தேர்தல் மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்தித்து இந்திய திருநாட்டுக்கு யார் தலைமையேற்றால் நல்லது என்பது குறித்து எழுச்சியுரை ஆற்றுவர். தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து நாளை (இன்று) தெரிவிக்கப்படும். தே.மு.தி.க. அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியாக இடம் பெறும் என்று அவர் தெரிவித்தார். விஜயகாந்த்துடனான சந்திப்பின்போது அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. துணைப்பொதுசெயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து