விஜயகாந்தை கண்கலங்க வைத்த தே.மு.தி.க நிர்வாகி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தமிழகம்
vijayakanth 01-09-2018

சென்னை : தேமுதிக நேர்காணலில் பங்கேற்ற நிர்வாகி ஒருவர், ‘உங்களைப் பார்த்ததே போதும், சீட் எதுவும் வேண்டாம் என்று’ கூறியதைக் கேட்ட விஜயகாந்த் மகிழ்ச்சியில் கண்கலங்கினார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அரசியல் கட்சிகளில் வேட்பாளர் நேர்காணல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கட்சி அ.தி.மு.க பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.   நேர்காணலில் கலந்து கொள்பவர்கள் கல்வி சான்றிதழ், தனித்தொகுதி என்றால் அதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி நேர்காணலில் பங்கேற்றவர்கள் கல்விச் சான்றிதழ் கொண்டு வந்திருந்தனர். உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள், எத்தனை பூத் என்ற கேள்வியும் நேர்காணலில் கேட்கப்பட்டுள்ளது.நேர்காணலை விஜயகாந்த் தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தமணி என்பவர் நெல்லை தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணல் அறைக்கு சென்ற ஆனந்தமணியிடம் நேர்காணல் குழுவினர் தொகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த ஆனந்தமணி, ‘நான் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத்தாக்கல் செய்யவில்லை. கேப்டனை பார்க்கத்தான் வந்தேன்’ என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட விஜயகாந்த், கண் கலங்கியபடி சிரித்துள்ளார்.

கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த நேர்காணலின்போது இல்லை. அவர் நெல்லையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள கோயிலில் சாமிதரிசனம் செய்ய சென்றிருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நேர்காணலின்போது விஜயகாந்தை சந்தித்து பேசியது அவரது கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. விஜயகாந்த் இந்த தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து