திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை மனுத்தாக்கல் ஆரம்பம் - இடைத்தேர்தல் பிரசாரம் விரைவில் சூடு பிடிக்கும்

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019      தமிழகம்
Thiruparankundram-Constituency 2019 04 20

மதுரை : தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர்  சட்டசபை தொகுதிகளுக்கு மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்த தேர்தலையொட்டி வரும் 22-ம் அதாவது நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தொடங்குகிறது.

ஒரே கட்ட தேர்தல்...

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த 18-ம் தேதியன்று வேலூர் தொகுதி நீங்கலாக 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்தது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சராசரியாக 71.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 18 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சராசரியாக 75.37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மே 19-ம் தேதி...

காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் சில கட்சிகள் அந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

மனுத்தாக்கல் ஆரம்பம்...

இதையடுத்து இந்த 4 தொகுதிகளிலும் வரும் 22-ம் தேதி அதாவது நாளை வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 29-ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. அதை தொடர்ந்து மே மாதம் 2-ம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

பிரசாரம் சூடு பிடிக்கும்...

இந்த 4 தொகுதிக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டனர். அ.தி.மு.க.வில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான விருப்பமனு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று பெறப்படுகிறது. இந்த 4 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் களம் இறங்குகின்றன. அதன் பிறகு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கும்.

மே 23-ம் தேதி முடிவுகள்...

மே மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே மாதம் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்றைய தினம் இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

4 தொகுதி இடைத்தேர்தல்

1) மனுத்தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 22-ம் தேதி.
2) மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் - ஏப்ரல் 29-ம் தேதி.
3) மனுக்கள் மீது பரிசீலனை - ஏப்ரல் 30-ம் தேதி.
4) திரும்ப பெற கடைசி நாள் - மே 2-ம் தேதி.
5) இறுதி வேட்பாளர் பட்டியல் - மே 2-ம் தேதி.
4) தேர்தல் முடிவு அறிவிப்பு - மே 23-ம் தேதி.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து