முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது - வரும் 2-ம் தேதி இறுதி பட்டியல் வெளியீடு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 2-ம் தேதி வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் வேலூர்  தொகுதி நீங்கலாக 38 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி ஆகியவற்றுக்கு கடந்த 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.

அதன் பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதையடுத்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக, சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 29-ம் தேதியாகும். மனுக்கள் மீதான பரிசீலனை 30-ம் தேதி நடக்கிறது. வரும் 2-ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அன்று மாலையே 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். மே மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 23-ம் தேதி இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து