முடிவுக்கு வந்தது மீன்பிடி தடை காலம் மீனவர்களுக்கான நிவாரண தொகை விடுவிப்பு - குடும்பத்திற்கு தலா ரூ. 5000: அமைச்சர் ஜெயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60 நாட்களுக்கு கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையின்றி தவித்தனர். இதன் காரணமாக அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர். சிலர் உள்ளூரிலேயே தங்களுக்கு கிடைத்த வேலையை செய்து வந்தனர்.

மேலும் மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகள், வலைகள், மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுட்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகமும் வெறிச்சோடியது. தடை காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் நாட்டுப்படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வந்தனர். இதன் மூலம் கிடைத்த மீன்களுக்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டது. 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

இந்நிலையில் மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மீன்பிடி தடைக்காலம் நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தை போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். நிவாரணத் தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து