வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலா

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      சிவகங்கை
18 Agri

-சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை மூலம் அம்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், கொடி அசைத்து பயணத்தினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
          சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான வெளிமாநில, உள்மாநில, உள்மாவட்ட பயிற்சிகள், கண்டுணர்வு சுற்றுலாக்கள் மற்றும் செயல்முறை விளக்கங்கள் மூலம் தொழில் நுட்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கூட்டுப்பண்ணைய திட்டம், நீராபானம் தயாரித்தல், பண்ணை இயந்திரமாக்கல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல், மானாவாரி பயிர் சாகுபடி, மர எண்ணெய் பயிர் சாகுபடி மற்றும் இயற்கை பண்ணையம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
          மேலும், கூட்டுப்பண்ணைய திட்டம் 2017-2018, 2018-2019-ம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு 110 எண்கள் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு டிராக்டர், பவர்டில்லர், ரோடோவேட்டர், பவர்வீடர் போன்ற 317 எண்கள் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.  விவசாயிகளுக்கு மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் கூட்டுப்பண்ணைய திட்டம் பற்றி தெரிந்து கொள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 20 உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ஆந்திரா மாநிலம் - பிரகதி யுவா கேந்திரம் - நெல்லூர்-க்கு 5 நாட்கள் பயணமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எனவே, விவசாயிகள் கூட்டுப்பண்ணைய திட்டப் பயிற்சியில் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தெரிவித்தார்.
        இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மூ.இளங்கோவன், வேளாண்மை துணை இயக்குநர் (உபநி) நா.சசிகலா, வேளாண்மை அலுவலர் (உபநி) கோ.பரமேஸ்வரன், கண்ணங்குடி வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.இராஜேந்திரன், தொழில்நுட்ப மேலாளர்  கே.அன்பழகன் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் என்.குருதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து