தண்ணீர் கேட்டுப் போராட தி.மு.க.வுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : தண்ணீர் கேட்டுப் போராட தி.மு.க.வுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மிகப்பெரிய துரோகம்...

சென்னையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தண்ணீர் தொடர்பாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, உள்நோக்கத்தோடு, தி.மு.க.வும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினும் செய்வது என்பது நிச்சயமாக மக்களிடம் எடுபடாது. அவர்களிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என்பதற்கு ஒரு உதாரணத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஸ்டாலின், துரைமுருகன் இருவரும் சென்னையில்தான் உள்ளார்கள். வருடத்திற்கு 365 நாட்களில் 300 நாட்கள் சென்னையில்தான் உள்ளார்கள். 65 நாட்கள்தான் அவர்கள் ஊருக்குப் போவார்கள். 300 நாட்கள் சென்னையின் குடிநீரைக் குடித்துவிட்டு, ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் சென்னைக்கு வரக்கூடாது என்றால் இது மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம். இவர்கள் போராட்டம் நடத்துவதற்குத் தார்மீக உரிமை கிடையாது.

லாரிகள் மூலம்...

சென்னையில் இருந்து கொண்டு, சென்னை தண்ணீரை குடித்துக்கொண்டு, சென்னை மக்களுக்குத் தண்ணீர் வரக்கூடாது என்று எதிர்ப்பது என்ன நியதி. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனே அந்தர் பட்டி அடிக்கிறார். முதலில் ஒன்றைக் கூறிவிட்டு பின்பு அதனைச் சொல்லவில்லை என்று கூறுவது அவர்களுக்கு கைவந்த கலை. இதனை சென்னை நகர மக்கள் நிச்சயமாக உணருவார்கள். சென்னையில் 400க்கு மேற்பட்ட லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது.
 

பாதிப்பு ஏற்படாத...

துணை முதலமைச்சர் குறிப்பிட்டதுபோல பஞ்சம் என்பது கிடையாது. பற்றாக்குறை இருக்கலாம். அந்த பற்றாக்குறையைத் திறம்பட அரசு சமாளிக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். வறட்சி மற்றும் வெள்ளம் மற்றும் எந்த இயற்கை இடர்பாடுகளையும் சமாளிக்கும் திறன் படைத்தது அம்மாவின் அரசு. எனவே அரசியல் காரணங்களுக்காக நடத்தும் போராட்டங்கள் மக்களிடம் எடுபடாது. எந்த வகையிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்தான் தண்ணீர் எடுத்துக் கொண்டுவரப்படும் என்று முதல்வர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தில் (ஜோலார்பேட்டையில்) மக்களுக்குப் பிரச்சனை ஏற்படாத வகையில்தான் இது செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து