அமெரி்க்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ. 186.25 கோடி நிவாரணம் - சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ். அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi 2019 03 03

சென்னை : மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக, நமது மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தியில் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்காச்சோளம் பயிரிடுபவர்களில் 80 சதவீதத்திற்கும் மேல் சிறு, குறு விவசாயிகள் தான். ஆடி, புரட்டாசி மற்றும் சித்திரைப் பட்டங்களில் 80 சதவீதம் மானாவாரியாகவும், எஞ்சியுள்ளவை இறவைப் பயிராகவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.5 லட்சம் ஹெக்டேரில் மக்காச்சோளம் தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மாறிவரும் பருவநிலை காரணமாக, அமெரிக்காவில் மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் அமெரிக்கன் படைப்புழு அமெரிக்காவில் இருந்து 2016-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி 2018-ம் ஆண்டு நமது நாட்டிலும் பரவியது. தற்போது, நம் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், சீனா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் பரவி குறிப்பாக மக்காச்சோளப் பயிரினை தாக்கி உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்கன் படைப்புழு, கடந்த 2018-ம் ஆண்டில் கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நமது மாநிலத்திலும் மக்காச்சோளப் பயிரைத் தாக்கியது. இப்புழுவின் தாக்குதல், மக்காச்சோளப் பயிரின் அனைத்து நிலைகளிலும் விரைவில் பரவி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது. இப்படைப்புழுவின் தாக்குதல் பற்றி எனது கவனத்திற்கு வந்ததும், பயிர் பாதிப்பினை கணக்கெடுக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உடனடியாக நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டேன்.

அது மட்டுமன்றி, மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறைகளின்படி இம்மாதிரியான பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வழிவகை இல்லாத காரணத்தால், இந்த வகையான பயிர் பாதிப்பினையும் வரையறைகளில் சேர்த்து, நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டேன். உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், இப்படைப்புழு கடந்த ஆண்டு முதன்முதலாக தாக்கியதால் சாகுபடி செய்யப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 எக்டர் பாதிப்படைந்தது.

வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் துரிதமாக கணக்கெடுத்ததன் அடிப்படையில், மக்காச்சோளத்தைப் பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயர் துடைக்க மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும் மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு 7,410 ரூபாயும் என்ற விகிதத்தில், மொத்தம் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்புழு தாக்குதலைத் தடுக்க, கோடை உழவு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கவும், விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இப்படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களைக் காத்து விவசாயிகளின் நலன் காக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு என்றென்றும் விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசாகவே விளங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மக்காச்சோளம் பயிரினை சாகுபடி செய்து இப்புழுவின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இது தவிர, ஏற்கனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து இப்புழுவினால் பாதிப்படைந்த மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினையும் பெற்றுத் தர வேளாண்மைத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இது வரை சேராத வேளாண் பெருமக்களும், எதிர்வரும் காலத்தில் இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொருளாதார ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக இத்திட்டத்தில் சேர வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து