மஞ்சள் பட்டு அலங்காரத்தில் காட்சியளித்த அத்திவரதர் - ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      தமிழகம்
Athivaratar pilgrims darshan 2019 07 07

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை விடுமுறை நாளான நேற்று 1 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து அருளை பெற்றனர். நேற்று அத்திவரதர் பக்தர்களுக்கு மஞ்சள் பட்டு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.  கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் இருந்து அருள்பாலித்து வரும் அத்திவரதரை  தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர்  தமிழிசை சவுந்திரராஜனும் சென்று தரிசனம் செய்தார். அத்திவரதர் பற்றிய சிறப்புகளை ரவிசங்கர் பிரசாத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். டி.கே. நம்பி தெரு, டோல்கேட், ஆனைக்கட்டி தெரு அமுதபடி தெரு, வடக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, உள்ளிட்ட தெருக்கள் பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடிப் போனது. வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அத்திவரத பெருமாளை தரிசிக்க வந்திருந்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் துரம் வரை பக்தர்களின் வரிசை இருந்தது. பொது தரிசன வரிசையில் சென்றவர்கள் குறைந்தபட்சம் 4 மணி நேரம் காத்திருந்தே சுவாமியை தரிசிக்க முடிந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.  தினமும் ஒவ்வொரு வண்ணபட்டு அலங்காரத்தில் அருள் பாலித்து வரும் அத்திவரதர் நேற்று மஞ்சள் பட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து