பார்லி.யில் எதிரொலித்த கர்நாடக விவகாரம்: காங்கிரஸ் அமளியால் அவை இன்று வரை ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2019      இந்தியா
parliament 2018 3 6

கர்நாடக மாநிலத்தின் அரசியல் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது. ஆளும் கூட்டணி கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டி விட்டதாகவும், எம்.எல்.ஏ.க்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அவையின் அலுவல்களை நிறுத்தி வைத்து விட்டு, கர்நாடக பிரச்சனை குறித்து விவாதிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், அதனை அவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதே போல் மேற்கு வங்க பிரச்சனையை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும், அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். இதையடுத்து அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். 12 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும் அமளி நீடித்தது. எனவே, பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார். 2 மணிக்கு பின்னர் அவை கூடிய போதும் இதே நிலை நீடித்ததால் நாளை (இன்று)வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து