கோலிக்கு ராசி இல்லாத உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டங்கள்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019      விளையாட்டு
kohli 2019 07 11

உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலிக்கு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மட்டும் ராசியே இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் கடந்த மூன்று உலகக்கோப்பை அரையிறுதியையும் சேர்த்து 11 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமான சாதனையை படைத்துள்ளார்.

தற்போதைய அனைத்து வகையான கிரிக்கெட்டில் போட்டியிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர் விராட் கோலி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் கடந்த சில ஆண்டுகளில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அதிக வேகத்தில் ரன்களை சேகரித்து வருகிறார். ஆனால் நாக்-அவுட் சுற்றில் மட்டும் தடுமாறுகிறார்.
ஐ.சி.சி கிரிக்கெட் உலகக்கோப்பையில் கடந்த மூன்று ஆண்டுகளிலும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் கோலி பேட்டில் இருந்து அதிக அளவில் ரன் ஏதும் வரவில்லை.

ஏற்கனவே கடந்த 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக கோலி 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 1 ரன் தான் எடுத்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியிலும் கோலி 1 ரன்னில் அவுட் ஆன நிலையில், உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் அவரது சராசரி வெறும் 3.67 ரன்கள் என பதிவாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் கோலிக்கு உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் மட்டும் ராசியே இல்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

உலகக்கோப்பைகளில் இதுவரை ஆறு நாக் அவுட் சுற்றுகளில் விராட் கோலி வெறும் 73 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

விராட் கோலியின் உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்று ரன்கள் பின்வருமாறு:-
2011 உலகக்கோப்பை கால் இறுதி 24 ரன்கள் (ஆஸ்திரேலியா)
2011 உலகக்கோப்பை அரை இறுதி 9 ரன்கள் (பாகிஸ்தான்)
2011 உலகக்கோப்பை இறுதி போட்டி 35 ரன்கள் (இலங்கை)
2015 உலகக்கோப்பை கால் இறுதி 3 ரன் (வங்காள தேசம்)
2015 உலகக்கோப்பை அரை இறுதி 1 ரன் (ஆஸ்திரேலியா)
2019 உலகக்கோப்பை அரை இறுதி 1 ரன் (நியூசிலாந்து)

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து