ஆன்லைனில் அமோக விற்பனையாகும் சிறைக் கைதிகள் தயாரிக்கும் பிரியாணி

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      இந்தியா
jail-Biryani 2019 07 12

கேரளா மாநிலத்தின் சிறையில் உள்ள கைதிகள் தயாரிக்கும் பிரியாணி காம்போ ரூ. 127 பேக்கேஜ் ஆன்லைனில் அமோக விற்பனையாகி வருகிறது.

கேரளாவின் வையூர் மத்திய சிறைச் சாலையில், கைதிகளை நல்வழிப்படுத்த சிறை நிர்வாகிகள் இணைந்து ஒரு முடிவினை மேற்கொண்டனர். கைதிகளை சமைக்க வைத்தனர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்த சிறையில் கைதிகளே நாள்தோறும் சப்பாத்திகளை போட்டு வந்துள்ளனர். அதிகப்படியான சப்பாத்திகள் போடப்படும் போது அதனை விற்றும் வந்துள்ளனர். இந்த சிறைக் கைதிகளின் சப்பாத்திகளுக்கு அப்பகுதியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, பேக்கரி வகைகள், அசைவ குழம்பு வகைகள் மற்றும் பிரியாணி ஆகியவை சமைத்து வைத்து சிறையில் உள்ள கவுண்டர்களில் விற்பனை செய்ய தொடங்கினர்.

இந்த உணவுப் பொருட்கள் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன், சிறையின் வருவாயும் அதிகரித்தது. இதனையடுத்து சிறை நிர்வாகம் இந்த விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விகியுடன் மக்களுக்கு உணவுகளை கொண்டு செல்ல ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிரியாணி காம்போ பேக்கேஜ் ஒன்றை அறிமுகப்படுத்தினர். ரூ.127 விலை கொண்ட இந்த காம்போ பேக்கேஜில், 300 கிராம் பிரியாணி, சிக்கன் செக் பீஸ், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலர் ஊறுகாய்,ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவ்வளவு குறைந்த விலையில் இத்தனை வகைகளா? என கேரள மக்கள் ஆன்லைனில் ஆர்டர்களை குவித்து வருகின்றனர். இந்த வரவேற்பை கண்டு சிறை நிர்வாகமும், கைதிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து