ரூபாய் இரண்டாயிரம் கோடியில் சென்னைக்கு அருகே உணவுப் பூங்கா - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
cm edapadi1 2018 10 17

சேலம் : ரூபாய் இரண்டாயிரம் கோடியில் சென்னைக்கு அருகே உணவுப் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, தாரமங்கலம் புதிய புறவழிச் சாலை மற்றும் மேம்பாலங்களை திறந்து வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

இந்தியாவின் ராணுவத் தளவாடங்களுக்கான உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதற்கு மிகப்பெரிய தொழிற்சாலையை சேலம் ஸ்டீல் பிளாண்ட் பகுதியில் உள்ள ஒரு பகுதி நிலத்தில் மத்திய அரசு அமைக்க இருப்பதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது ஒரு வரப்பிரசாதமான திட்டம், இதனையும் அம்மாவின் அரசு தான் கொண்டு வந்திருக்கிறது. குடிநீருக்காக கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். தற்போது, நீர்மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. விவசாயத்திற்கு தேவையான நீர், குடிப்பதற்கான பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவை விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், ஆங்காங்கே இருக்கின்ற ஏரிகளை விவசாய சங்கங்களிடம் ஒப்படைத்து, விவசாயிகளின் பங்களிப்போடு உருவாக்க வேண்டுமென்று, குடிமராமத்துத் திட்டத்தினை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். விவசாய அமைப்புகளும் தங்களுடைய ஆதரவினை நல்கி இத்திட்டம் சிறப்பாக செயல்பட உதவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படுவதால் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்து தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேட்டூர் அணையில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கெல்லாம் அம்மாவினுடைய அரசு தாரளமாக அனுமதி வழங்கியிருக்கின்றது. ஓமலூர் பகுதி விவசாயிகள் மலர்களை அதிகளவில் பயிரிட்டு பெங்களூரில் விற்பனை செய்கின்றார்கள். அதற்குத் தகுந்த விலை கிடைப்பதில்லை. எனவே, அம்மாவின் அரசால் சர்வதேச அளவில் மலருக்கான ஏலமய்யம் ஒன்றை ஓசூரில் ஏற்படுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளேன். விவசாயிகளுக்குத் தேவையான விலை கிடைக்காத காலங்களில் அங்குள்ள குளிர்பதனக் கிடங்குகளில் மலர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு அங்கே  ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும். சர்வதேச அளவில் வருகை புரியும் வியாபாரிகளுக்கும் தங்குவதற்கு தேவையான ஓய்வு அறைகளும் கட்டிக் கொடுக்கப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக ஓமலூரிலிருந்து மேச்சேரி செல்கின்ற சாலையில் பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்படும். அதில், விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களை அந்த மார்கெட்டில் ஆன் - லைன் மூலமாக விற்பனை செய்து கொள்ளலாம். அப்படியும் விலை கட்டுப்படியாகாத காலங்களில் அங்குள்ள குளிர்பதனக் கிடங்கில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். அதற்கு வாடகை ஏதுமில்லை, இங்கு ஏ.டி.எம். வசதியும் செய்து கொடுக்கப்படும்.

சென்னைக்கு அருகே ரூபாய் இரண்டாயிரம் கோடியில் உணவுப் பூங்கா அமைக்கவிருக்கின்றோம். விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களை உணவுப் பூங்காவில் விற்பனை செய்கின்ற பொழுது உரிய விலை கிடைக்கும். வறட்சியால் பாதிக்கப்படுகின்ற விவசாய நிலங்களுக்கு சொட்டுநீர்ப் பாசன கருவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவிகித மானியம் கொடுக்கின்றோம். ஒரு ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு 75 சதவிகித மானியத்தில் கொடுக்கின்றோம். விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்க வேண்டுமென்று பிரதமர் சொல்லியிருக்கின்றார். எனவே அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக இருக்கின்றது. தொழில் வளம் பெருக, விவசாயம், ஜவுளித் தொழில் இரண்டும் சிறக்க, கைத்தறி நெசவாளர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்திருக்கின்றோம். பொங்கல் திருநாளன்று அணிவதற்கு பொது மக்கள் கைத்தறி வேட்டி, சேலைகள் நெய்வதற்கான கூலியை உயர்த்திக் கொடுத்திருக்கின்றோம். புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதன் மூலமாக அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் அம்மாவின் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது மக்களின் அரசு, விவசாயிகளின் அரசு, அம்மாவினுடைய அரசு. விவசாயிகளின் நலனை தலையாய கடமையாகக் கொண்டிருக்கின்றது. மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசு. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து