முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவிட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை:

புதன்கிழமை, 24 ஜூலை 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதால் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதையடுத்து குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள்(சிசிடிவி) அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூங்கா நகரமான மதுரையின் துணை நகரமாக திகழ்வது திருமங்கலம் நகரம். கடந்த சில மாதங்களாக திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் மற்றும் டூவீலர்களில் சென்றிடும் பெண்களை வழிமறித்து நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகிறது.அதே போல் குற்றச் செயல்களை செய்திடும் நபர்கள் தப்பியோடிடும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.நாள் தோறும் காலை மாலை என இருவேளைகளிலும் போலீசார் ரோந்து சென்றாலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் டூவீலர்களில் தப்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.குறிப்பாக டூவீலர்களில் வேலைக்கு சென்று திரும்பிடும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்திடும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும்,தப்பிச் சென்றிடும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.இதனால் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் திருமங்கலம் பகுதியில் வந்து கைவரிசை காட்டுவதை வாடிக்கையாக்கி விட்டனர்.இதற்கு காரணம் திருமங்கலம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கண்காணிப்பு(சிசிடிவி) கேமராக்கள் இல்லாததுதான்.எனவே குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக திருமங்கலம் நகரின் முக்கிய இடங்களில் காவல்துறை சார்பில் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அதிகளவு கண்காணிப்பு கேமராக்களை பொருத்திட வேண்டும்.இதன் மூலம் அடிக்கடி நடைபெறுகிற பல்வேறு குற்ற சம்பவங்களை காவல்துறையினர் கட்டுப்படுத்திட முடியும் என்பதே திருமங்கலம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து