முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக மழை பாதிப்பு பகுதிகளில் முதல்வர் எடியூரப்பா நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் மழையால் பாதிக்கப்பட்ட சிவமொக்கா மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 1-ம் தேதி முதல் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழையால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடியூரப்பா நேரில் சென்று பார்வையிட்டு, மக்களுக்கான நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

நேற்று சிவமொக்கா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மழை பாதிப்புகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தீர்த்தஹள்ளி தாலுகா ஹெகலாட்டியில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 40 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிந்து போனதையும் அவர் பார்வையிட்டார்.  மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெலகாவியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மகராஷ்டிர மாநில எல்லையில் அமைந்து உள்ள வடகர்நாடக மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. விளைநிலங்கள் மூழ்கியதால் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கி விட்டன.  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏராளமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், வீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடு கட்டிக் கொள்ள 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து