ஆண்டிகுவா டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் பும்ரா சாதனை

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
Bumrah 2019 08 24

ஆண்டிகுவா : டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் அனைவரும் கை கொடுக்காத நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான ஆட்டத்தில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 297 ரன்களை எட்டியது.

அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சில் நிலை குலைந்து 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. தேநீர் இடைவேளை முடிந்த பின், பிராவோவை எல்பிடபிள்யு முறையில் பும்ரா வெளியேற்றினார். பிராவோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளை வீசி (2465 பந்துகள்) 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் எனும் சாதனையை பும்ரா படைத்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் பும்ரா. 11 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார் .  அவருக்கு அடுத்த இடங்களில் வெங்கடேஷ் பிரசாத், ஷமி (13 போட்டிகள்), இர்பான் பதான், ஸ்ரீசாந்த் (14 போட்டிகள்) காவ்ரி, கபில்தேவ் (16 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.

அதே போல. ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் பும்ரா மூன்றாம் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 9 போட்டிகளிலும், அனில் கும்ப்ளே 10 போட்டிகளிலும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளனர். பும்ராவுக்கு அடுத்தபடியாக, அஸ்வின் 2597 பந்துகளில் 50 விக்கெட்டுகளை சாய்த்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பும்ரா தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சு தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால் டெஸ்ட் போட்டிக்கான வரிசையில் 16-வது இடத்தில் உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து