முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. மாபெரும் சக்தி என்பதை நிரூபிப்போம் - விஜயகாந்த் சூளுரை

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செப்டம்பர் 14-ந்தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆரம்பித்து 15ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு என்று தனி வரலாறு உண்டு, எந்த கட்சியிடம் இருந்தும் பிரிந்து வராமல் லஞ்சம், ஊழலுக்கு முற்றுபுள்ளி வைக்க, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தமிழ்நாட்டில் நிலவும் விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, வேலை வாய்ப்பு, பாலியல் வன்கொடுமைகள், அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர் பிரச்சனை, சுகாதாரம், மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு, சாலை வசதிகள் போன்ற எத்தனையோ பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவற்றிற்கு தீர்வுகாணவும் தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தே.மு.தி.க தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.

எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது நமது கழகம். நம் கழகத்தினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும், தே.மு.தி.க இன்று தமிழ்நாட்டில் அசைக்கமுடியாத சக்தி என்றும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் உணர்த்துவோம்.

நமது கழகம் தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி என்று அனைத்து இடங்களிலும் வேறூன்றி தழைத்தோங்கி இருக்கிறது என்றால் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு, விசுவாசத்தோடும் பாடுபடும் இலட்சக்கணக்கான உண்மையான நிர்வாகிகளும், தொண்டர்களும் என்பதை நான் நன்கு அறிவேன். தே.மு.தி.க தனக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே. எந்தவித வன்முறைக்கும் இடம்கொடுக்காமல் அறவழியில் மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் இயக்கமாகும். கடினமான நேரத்தையும், காலத்தையும் தந்து, கடவுள் நம்மை சோதிக்கும் போதெல்லாம் பொறுமையாக காத்திருக்கும் எங்கள் உறுதிக்கு நீங்கள் தரப்போகும் வெற்றிக்காக உயர்ந்த சிந்தனையோடு, தமிழக மக்கள் நம் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்படுவோம். வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்றதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். உண்மையான கொள்கைக்காக இலட்சியத்திற்காக என்மேல் கொண்ட பற்றின் காரணமாக நம் இயக்கத்தில் உள்ள இலட்சக்கணக்கான நல்ல உள்ளங்களுடன் என் பயணம் என்றும் தொடரும். நல்லவர்கள் இலட்சியம், வெல்வது நிச்சயம் என்ற உறுதியோடும், “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்கே” என்கிற நமது கொள்கைப்படி பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து தேமுதிக துவக்க நாளில் வெகுசிறப்பாக கொண்டாட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து